சென்னை வங்கிக் கொள்ளையில் திடீர் திருப்பம்: இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கநகைகள் மீட்பு

சென்னை வங்கிக் கொள்ளையில் திடீர் திருப்பம்: இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கநகைகள் மீட்பு

சென்னையில் தனியார் வங்கி கொள்ளையில் திடீர் திருப்பமாக அச்சரபாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் கத்திமுனையில் ஊழியர்களை மிரட்டி லாக்கரில் இருந்த 31.7 கிலோ நகைகளைக் கொள்ளையடித்து சென்றனர். இந்த வங்கியின் ஊழியர் முருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நகைகளை கொள்ளையடித்தது விசாரணையில் தெரிய வந்தது. அத்துடன் கொள்ளையர்கள் தப்பித்து செல்ல சிலர் வாகனங்களைக் கொடுத்து உதவியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தனிப்படை விசாரணை நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட வில்லிவாக்கத்தை சேர்ந்த சந்தோஷ், பாலாஜியை கைது செய்து அவர்களிடமிருந்து 18 கிலோ தங்க நகைகள், 2 கார்கள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டனர். இந்த தகவலை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கொள்ளைக் கும்பலின் தலைவன் முருகன் மற்றும் அவரது நண்பர் சூர்யா ஆகியோர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். சூர்யா விழுப்புரத்தில் உள்ள உறவினர் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 13 கிலோ நகைகளை மீட்டதாகவும், வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட முழு நகைகளும் மீட்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மீட்கப்பட்ட நகைகளைக் கணக்கெடுத்து பார்க்கும் போது 28 கிலோ மட்டுமே இருந்ததால் காவல் துறையினர் குழப்பமடைந்தனர். இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், "வங்கி தரப்பில் கொள்ளை போன தங்க நகைகள் குறித்து சரியான தகவல் தெரிவிக்கவில்லை. நகைகள் வைத்திருந்த பிளாஸ்டிக் கவரின் எடையையும் சேர்த்தே கூறியதாகவும், அதனால் மீண்டும் நகைகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது, இன்னும் 3 கிலோ தங்க நகைகள் மீட்கவேண்டியது உள்ளது” என்று கூறினார்.

இந்த நிலையில் அச்சரபாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்க நகைகளை போலீஸார் இன்று மீட்டனர். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட சந்தோஷின் உறவினரான அமல்ராஜ் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரும் சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டாரா என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in