அரசு பேருந்தில் 19 மாதத்தில் 3.36 கோடி பேர் பயன்: எந்த மாவட்டத்தில் தெரியுமா?

அரசு பேருந்தில் 19 மாதத்தில் 3.36 கோடி பேர் பயன்: எந்த மாவட்டத்தில் தெரியுமா?

கடந்த 19 மாதங்களில் அரசு நகர் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.36 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை அடுத்து தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஸ்டாலின், 2021 மே 7-ம் தேதி நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயண திட்டத்தை அறிவித்தார். பணி புரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் என 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் நகர் பேருந்துகளில் பயணிக்கும் நிலை உள்ளது. மூன்றாம் பாலினத்தவர், மாற்றுதிறனாளிகள் மற்றும் உடன் வரும் உதவியாளர் ஒருவர் கட்டணமின்றி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அரசு போக்குவரத்து கழகம், நகர் பேருந்துகள் மூலம் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஈட்டப்படும் வருவாயில், மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தின் கீழ் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் 1,200 கோடி இழப்பீட்டு தொகையை மானியமாக வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டத்தில் கட்டணமின்றி பயணிக்கும் மகளிருக்கு அரசு நகர் பேருந்துகளில் தனி பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 120 வழித்தடங்களில் நகர் பேருந்துகள், 200க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் புறநகர் பேருந்துகள் அரசு போக்குவரத்து கழக 6 பணிமனைகள் மூலம் தினமும் இயக்கப்படுகிறது.

கட்டணமில்லா பயணத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் அரசு நகர் பேருந்துகளில் கடந்த 19 மாதங்களில் 3 கோடியே 36 லட்சத்து 52 ஆயிரத்து 835 மகளிர், 2 லட்சத்து 32 ஆயிரத்து 613 மாற்றுத்திறனாளிகள், 10 ஆயிரத்து 411 மாற்றுத்திறனாளி உடன் வரும் உதவியாளர்கள், 12 ஆயிரத்து 767 மூன்றாம் பாலினத்தவர் பயணித்துள்ளனர். சராசரியாக 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மகளிர் கட்டணமின்றி தினமும் பயணித்து வருகின்றனர். இத்திட்டத்தால் ஒவ்வொரு மாதமும் மிச்சமாகும் பேருந்து கட்டணம் இதர அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுகிறது என பெண்கள் தெரிவிக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in