தனியார் வங்கியில் கொள்ளை போனது 31.7 கிலோவா, 28 கிலோவா?: கொள்ளையர்கள் வாக்குமூலத்தால் குழம்பி நிற்கும் காவல் துறை

தனியார் வங்கியில் கொள்ளை போனது 31.7 கிலோவா, 28 கிலோவா?: கொள்ளையர்கள் வாக்குமூலத்தால் குழம்பி நிற்கும் காவல் துறை

சென்னையில் தனியார் வங்கி கொள்ளையில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் வாக்கு மூலத்தால் காவல்துறை குழம்பியுள்ளது. இதனால் கொள்ளையர்கள் இருவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் கத்திமுனையில் ஊழியர்களை மிரட்டி லாக்கரில் இருந்த 31.7 கிலோ நகைகளைக் கொள்ளையடித்து சென்றனர். இந்த வங்கியின் ஊழியர் முருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நகைகளை கொள்ளையடித்தது விசாரணையில் தெரிய வந்தது. அத்துடன் கொள்ளையர்கள் தப்பித்து செல்ல சிலர் வாகனங்களைக் கொடுத்து உதவியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.


இதையடுத்து தனிப்படை விசாரணை நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட வில்லிவாக்கத்தை சேர்ந்த சந்தோஷ், பாலாஜியை கைது செய்து அவர்களிடமிருந்து 18 கிலோ தங்க நகைகள், 2 கார்கள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டனர். இந்த தகவலை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கொள்ளைக் கும்பலின் தலைவன் முருகன் மற்றும் அவரது நண்பர் சூர்யா ஆகியோர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். சூர்யா விழுப்புரத்தில் உள்ள உறவினர் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 13 கிலோ நகைகளை மீட்டதாகவும், வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட முழு நகைகளும் மீட்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மீட்கப்பட்ட நகைகளைக் கணக்கெடுத்து பார்க்கும் போது 28 கிலோ மட்டுமே இருந்ததால் காவல் துறையினர் குழப்பமடைந்துள்ளனர். மேலும் கைதான முருகன், சூர்யா ,ஆகியோர் கொள்ளையடித்த அனைத்து நகைகளையும் கொடுத்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில் வங்கி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் 31.7 கிலோ தங்க நகை கொள்ளை போனதாக குறிப்பிட்டிருப்பது காவல் துறையினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே வங்கி தரப்பில் கூறியது தவறான தகவலா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நகைகளுக்கான ரசீதுகளை ஆய்வு செய்து வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் உண்மையான மதிப்பு எவ்வளவு என்பது குறித்து வங்கி அதிகாரிகளிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையிலேயே காணாமல் போன நகைகள் 31.7 கிலோவா அல்லது 28 கிலோவா என்ற குழப்பத்தில் போலீஸார் உள்ளனர். இந்நிலையில் சிறையில் உள்ள சந்தோஷ் , பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அரும்பாக்கம் போலீஸார், எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இதை அடுத்து கொள்ளையர்களிடம் போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் "வங்கி தரப்பில் கொள்ளை போன தங்க நகைகள் குறித்து சரியான தகவல் தெரிவிக்கவில்லை. நகைகள் வைத்திருந்த பிளாஸ்டிக் கவரின் எடையையும் சேர்த்தே கூறியதாகவும், அதனால் மீண்டும் நகைகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது, இன்னும் 3 கிலோ தங்க நகைகள் மீட்கவேண்டியது உள்ளது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in