ஒரேநாளில் 314 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டது ஏன்?- கேரளத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

ஒரேநாளில் 314 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டது ஏன்?- கேரளத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

பொதுவாக சாலைப்பணிகளுக்காக கால் சென்ட் இடத்தைக்கூட விட்டுக்கொடுக்காமல் நீதிமன்றப் படியேறும் காலம் இது! ஆனால் கேரளத்தில் சாலைப்பணிக்காக முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் தங்களது ஜமாத்திற்கு சொந்தமான மயானத்தையே இடம்மாற்றிய ஆச்சரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள பாவப்பெடி எனும் ஊரில் நூற்றாண்டுகள் பழமையான ஜும்மா மசூதி சாலையோரத்தில் உள்ளது. அந்த பள்ளிவாசலின் காம்பவுண்ட் அருகில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் கபரஸ்தான் என்னும் மயானம் உள்ளது. இந்த வழியாகச் சாலை செல்கிறது. ஆனால் இந்த நிலத்தை விட்டு கொடுப்பதில் முதலில் தயக்கம் ஏற்பட்டது. ஆனால் நகரின் அபிவிருத்திக்கு சாலை விரிவாக்கம் முக்கியம் என்பதை ஜமாத் மக்களுக்கு எடுத்துக் கூறிய மசூதி நிர்வாகம் மையவாடியை வேறு பகுதிக்கு மாற்ற முடிவு செய்தனர்.

அந்த அரை ஏக்கர் வளாகத்தில் 15 வருடம் முதல் ஐம்பது வருடங்களுக்கு முன்பு மரணித்த 314 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட சமாதிகள் இருந்தது. ஜேசிபி மூலம் சாலைப்பணிகளுக்கு இடையூறு இல்லாத வேறு பகுதியில் மிகப்பெரிய குழிகள் தோண்டப்பட்டன. ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்ட 314 சமாதிகளையும் தோண்டி சிதிலமடைந்தும், உருக்குலைந்த நிலையிலும் காணப்பட்ட உடல் உறுப்புகளை புதிய குழிகளில் மறு அடக்கம் செய்தனர். தொடர்ந்து மசூதி நிர்வாகிகள் இடத்தை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைத்தனர். இந்த செயல் கேரளத்தில் ஆச்சரியத்தையும், நெகிழ்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in