அடுத்தடுத்த சம்பவங்களால் அதிரும் சென்னை; நிதி நிறுவனத்தில் 30 லட்சம் கொள்ளை: குற்றவாளிகள் ஆந்திராவிற்கு எஸ்கேப்பா?

அடுத்தடுத்த சம்பவங்களால் அதிரும் சென்னை; நிதி நிறுவனத்தில் 30 லட்சம் கொள்ளை: குற்றவாளிகள் ஆந்திராவிற்கு எஸ்கேப்பா?

சென்னை வடபழனியில் தனியார் நிதி நிறுவனத்தில் கத்தி முனையில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையன் ஒருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்துள்ளனர். மற்றவர்களைப் பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள ஓசோன் கேபிடல் நிதி நிறுவனம் உள்ளது. இதை சென்னை எண்ணூா் அன்னை சிவகாமி நகரைச் சோ்ந்த தீபக் (32) நடத்தி வருகிறாா். அவரும், நிறுவனத்தில் பணிபுரியும் நவீன்குமாரும் நேற்று இருந்த போது 7 பேர் கொண்ட கும்பல் அலுவலகத்திற்குள் புகுந்தது. கத்திகைய் காட்டி பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த ரூ.30லட்சத்தை அந்த கும்பல் கொள்ளையடித்தது. இதன் பின் அந்த கும்பல் டூவீலர்களில் தப்பிச் சென்றது. அக்கும்பலை தீபக் பொதுமக்களுடன் இணைந்து விரட்டிச்சென்றார். அதில் கொள்ளைக் கும்பலில் இருந்த ஒருவர் பிடிபட்டார்.

வடபழனி போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினர். பிடிபட்டவா் விருகம்பாக்கம் இந்திரா நகா் முதல் தெருவை சோ்ந்த செய்யது ரியாஸ் ( 22 ) என்பது தெரியவந்தது. தப்பிச் செல்லும் போது டூவீலரில் இருந்து கீழே விழுந்த ரியாசுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவரை சாலிகிராமத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீஸாா் அனுமதித்தனர். மற்ற கொள்ளையர்களைப் பிடிக்க ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி ஆந்திரா, திருச்சி ஆகிய இடங்களுக்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர். சென்னை தனியார் வங்கியில் 38 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்த நிதி நிறுவனத்தில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in