
தூத்துக்குடியில் ஆழ்கடல் பகுதியில் 30 கிலோ பீடி இலைகள் மிதந்தது. இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும், கடலோர போலீஸார் மீனவர்களின் உதவியோடு அவற்றை மீட்டனர். மேலும் பீடி இலைகளை பதுக்கி, கடத்த முயன்ற நபரையும் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி கடல் வழியாக இலங்கைக்கு தொடர்ந்து பீடி இலைகள் கடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தை விட அங்கு 5 மடங்கு அதிக விலை கிடைப்பதால் தொடர்ந்து பீடி இலைகள் கடத்தப்பட்டு வ்ருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி தாளமுத்துநகர் கடல் பகுதியில் சாக்குமூட்டைகள் மிதப்பதாக கடலோரப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அவை முத்துநகர் கரைப்பகுதியிலும் தொடர்ந்து ஒதுங்கிய வண்ணம் இருந்தது.
போலீஸார் அந்தச் சாக்கு மூட்டைகளைக் கைப்பற்றி சோதனை செய்தபோது 5 மூட்டைகளில் 30 கிலோ அளவுக்கு பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. இந்த பீடி இலை மூட்டைகளை கடத்தும் நோக்கத்தில் கொண்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீஸார், அதைக் கடத்தியது யார்? எதற்காக கடலில் தூக்கி வீசினர் என்னும் கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.