
திருச்சியில் வீட்டுமனை சர்வே அறிக்கையை அனுப்பி வைக்க வீட்டு உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய துணை சர்வே வட்ட ஆய்வாளருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கொட்டப்பட்டு இந்திரா நகரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் திருச்சி குண்டூரில் உள்ள தனது வீட்டு மனைகளுக்கு தனிப்பட்டா கேட்டு வின்னப்பித்திருந்தார். இதுகுறித்து கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதி , திருச்சி வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள சர்வே செக்சனில் துணை சர்வே வட்ட ஆய்வாளர் கணேசமூர்த்தியை அணுகியுள்ளார்.
அப்போது சக்கரவர்த்தின் வீட்டுமனை சர்வே ரிப்போட்டை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க கணேசமூர்த்தி ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சக்கரவர்த்தி இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.
அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆலோசனையின் பேரில் சக்கரவர்த்தி, கணேசமூர்த்தியிடம் லஞ்சம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணேசமூர்த்தியை கையும் களவுமாக கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு திருச்சி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் கணேசமூர்த்திக்கு ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 7 கீழ் ஒரு வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சட்டப்பிரிவு 13(2) உடன் இணைந்த13(1)(ஈ) ன் கீழ் 3 வருடம் கடுங்கால் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது