துருக்கியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 2 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 3 வயது சிறுவன் தனது தந்தையை பார்த்ததும் ஆனந்தமாய் சிரிக்கும் வீடியோ சமூகவலைதங்களில் வைரலாகியுள்ளது.
துருக்கி, ரஷ்யாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி இதுவரைக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். குறிப்பாக கைக்குழந்தைகள் அதிக அளவில் பாதித்திருக்கின்றனர்.
அதே நேரத்தில் அதிசயமும் நிகழ்ந்திருக்கிறது. இடிபாடுகளில் சிக்கிய பச்சிளம் குழந்தை ஒன்று காப்பாற்றப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த குழந்தையின் தாயார் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் 36 மணி நேரமாக கட்டிட இடிப்பாடுகளுக்குள் தனது தம்பியை அரவணைத்து இருந்த சிறுமியின் செயல் அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டது. அந்த சிறுமி எப்போது தங்களை மீட்பார்கள் என்று காத்திருந்த சூழ்நிலையில் பல மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டு 2 நாட்களுக்கு பிறகு துருக்கியின் ஹரார் மேன்பிராஸ் நகரத்தில் இருந்து 3 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார். இந்த சிறுவனின் தந்தை முன்னதாகவே மீட்கப்பட்டுவிட்டார். தனது மகன் உயிருடன் மீட்கப்படுவானா என்று காத்திருந்த தந்தைக்கு மீட்பு குழுவினர் இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர். உயிருடன் மீட்கப்பட்ட மகன் தனது தந்தையை பார்த்ததும் ஆனந்தாய் சிரித்தான். அப்போது, அங்கிருந்த மீட்பு குழுவினர் ஆனந்தத்தில் கூச்சலிட்டனர். நிலநடுக்கத்திற்கு மத்தியிலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பது அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இதேபோல் துருக்கியில் 65 மணி நேரத்துக்கு பிறகு ஒரு குழந்தை உள்பட நான்கு பேரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இஸ்தான்புல் மீட்பு படையினர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பகாய் நகரில் ஹெலன் என்ற குழந்தை 65 மணி நேரமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவது பதிவாகி இருக்கிறது. அதேபோல் மற்றொரு பகுதியில் நான்கு பேர் கொண்ட குடும்பத்தினரை மீட்டுக் குழுவினர் மீட்கும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.