
டெல்லியில் காணாமல் போன 3 வயது சிறுவன் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கரும்புத்தோட்டத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் ப்ரீத் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் சந்த் (36). வங்கி அதிகாரியான இவருக்கு திருமணமாகி 3 வயதில் மகன் இருந்தார். இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த கிஷோரின் 3 வயது மகன் காணாமல் போனார். வீட்டில் அதிர்ச்சியடைந்த கிஷோரின் மனைவி அக்கம் பக்கத்தில் தேடியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து போலீஸில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து நான்கு தனிப்படைகள் அமைத்து காணாமல் போன சிறுவனைத் தேடி வருவந்தனர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் உள்ள கரும்புத்தோட்டத்தில் அடையாளம் தெரியாத 3 வயது ஆண்டு குழந்தை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திய போது டெல்லியில் காணாமல் போன கிஷோர் சந்த் குழந்தை அது என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து டெல்லியில் கிஷோர் சந்த் உறவினர்கள், தெருவாசிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தால் போலீஸார் சந்தேகமடைந்தனர். இதையடுத்து சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது குழந்தையைக் கடத்தில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். எதற்காக கொலை செய்தார் என்ற விவரத்தைத் தெரிவிக்கவில்லை.
குழந்தை தலை துண்டிக்கப்பட்டுள்ளதால் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இந்த நிலையில், குற்றவாளியை கைது செய்வதுடன், இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்யக்கோரி டெல்லி ப்ரீத் விஹார் பகுதியில் நேற்று இரவு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் லேசாக தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.