வீட்டுக்கு விளையாடச் சென்ற 3 வயது சிறுவனை ரூ.1.30 லட்சத்துக்கு விற்ற அத்தை!

வீட்டுக்கு விளையாடச் சென்ற 3 வயது சிறுவனை ரூ.1.30 லட்சத்துக்கு விற்ற அத்தை!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து பிஹாரில் உள்ள ஒரு பெண்ணிடம் ரூ.1.30 லட்சத்துக்கு விற்கப்பட்ட 3 வயது சிறுவன் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறுவனை விற்ற அவனது அத்தை மற்றும் அவனை வாங்கிய பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஜூன் 19-ம் தேதி சிறுவன் காணாமல் போனதையடுத்து, அவரது பெற்றோர் ஜூன் 20-ம் தேதி போலீஸாரிடம் புகார் அளித்தனர். அந்த சிறுவன் கடைசியாக அவனது அத்தையின் வீட்டில் விளையாடினார் என்பதை அறிந்த போலீஸார் அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளியானது. பிஹாரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளதால், ஆண் குழந்தை வேண்டும் என கேட்டதாகவும், பேராசைப்பட்டு ரூ.1.30 லட்சத்துக்கு அப்பெண்ணிடம் இந்த சிறுவனை விற்றதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து குழந்தையின் தந்தையுடன் மக்தும்பூர் சென்ற போலீஸார் சிறுவனை மீட்டனர்.

பிஹாரின் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள மக்தும்பூர் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட அந்த சிறுவன், ஜார்கண்டின் ஹசரிபாக் மாவட்டத்தின் முஃபாசில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் இருக்கும் அவனது வீட்டில் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுவனை விற்ற அவனது அத்தை மற்றும் அவனை வாங்கிய பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் எனவும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in