
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மின்னல் தாக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ள சம்பவம் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த பெத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த உமா(30) மற்றும் பெரியம்மாள்(45) ஆகிய இருவரும் இன்று பிற்பகல் கருங்குழி கிராமத்தில் விவசாய நிலத்தில் பயிர் நடவு நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது திடீரென அதிர வைக்கும் சத்தத்துடன் இடி இடித்தது. அதனைத் தொடர்ந்து மின்னல் தாக்கியதில் எதிர்பாராத விதமாக வயலில் நடவு நட்டுக் கொண்டிருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கீழ்குப்பம் போலீஸார், இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோன்று கள்ளக்குறிச்சியை அடுத்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மனைவி முனியம்மாள்(53) இன்று மதியம் வீட்டிற்கு வெளியே நின்றிருந்தபோது, திடீரென மின்னல் தாக்கியதில் காயமடைந்துள்ளார். இதையடுத்து வீட்டிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மூன்று பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்திருப்பது அந்த மாவட்ட மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.