
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியினை சமாளிக்க முடியாமல் மேலும் 3 தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி பகுதியில் தஞ்சம் அடைந்தனர். இவர்களை மீட்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு ஆட்சியாளர்கள் மாறியும், பொருளாதார நெருக்கடிகள் முழுமையாக தீரவில்லை. இதனால் அதனைச் சமாளிக்க முடியாத பலர் இலங்கையில் இருந்து முறையான வழிகளிலும், முறையற்ற வழியிலும் வெளியேறி வருகின்றனர்.
இதில் இலங்கை தமிழர் பகுதிகளைச் சேர்ந்த பலர் அவ்வப்போது தமிழகத்திற்கு அகதிகளாக வருகின்றனர். ஏற்கெனவே 200-க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு அகதிகளாக வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று மேலும் 3 பேர் தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் பகுதிக்கு வந்திறங்கினர்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜிம்ஸ்ரிவ் என்ற விஜயன்(46), அவரது மனைவி ராஜினி(45), மகள் திபேந்தினி(18) ஆகிய மூவரும் நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து படகு மூலம் புறப்பட்டு நள்ளிரவு தனுஷ்கோடி பகுதியில் உள்ள கோதண்டராமர் கோயில் கடற்கரை பகுதியில் வந்திறங்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், அகதிகளை மீட்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.