கோவில்பட்டி மக்களை நடுங்க வைத்த வழிப்பறி கொள்ளையர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸார்!

கோவில்பட்டி மக்களை நடுங்க வைத்த வழிப்பறி கொள்ளையர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸார்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி விஜயாபுரி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவரது மகன் கற்பகராஜ்(33) கட்டுமானத் தொழிலாளியாக உள்ளார். இவரும், இவரது மனைவி குருலெட்சுமியும் தீத்தாம்பட்டி என்னும் ஊரில் இருந்து கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பைக்கை வழிமறித்த மர்மநபர்கள் குருலெட்சுமியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் கழுத்தில் போட்டிருந்த 2 பவுன் செயின், 4 கிராம் தங்கக் கம்மலையும் பறித்தனர். இதேபோல் நாகம்பட்டியைச் சேர்ந்த சிவராமச்சந்திரன்(29) என்பவர் தன் மனைவி வசந்தகுமாரி மற்றும் இரு மகன்களுடன் கோவில்பட்டியில் படம் பார்த்துவிட்டு ஊரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கரிசல்குளம் அருகே வந்துகொண்டிருந்தபோது 4 பேர் பைக்கை வழிமறித்து அதேபோல் கத்தியைக் காட்டி மிரட்டி வசந்தகுமாரியிடம் இரண்டரை பவுன் நகைகளைப் பறித்துச் சென்றார். இதேபோல் கோவில்பட்டி, வ.உ.சி நகர் 2வது தெருவைச் சேர்ந்த பரமசிவன்67) அவரது மனைவி பார்வதி(58) ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே டூவீலரில் வந்த மர்மநபர் பார்வதி கழுத்தில் இருந்த 2.5 பவுன் செயினை பறித்துவிட்டு அவரையும் கீழே தள்ளினார்.

இந்தத் தொடர் குற்றச்சம்பவங்கள் குறித்து அந்த, அந்த ஆளுகைக்குட்பட்ட போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையிலான போலீஸார் இளையரசேனந்தல் சாலையில் சித்திரம்பட்டிவிலக்கு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரே பைக்கில் வந்த மூவரைப் பிடித்து விசாரித்தது அவர்கள் தான் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் செயின் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்தக் குற்றச் சம்பவங்களில் இடுபட்ட சிவகாசியைச் சேர்ந்த விஜயகுமார்(32), அய்யனேரி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்திக்(19), நாலாட்டின்புத்தூரச் சேர்ந்த சிரஞ்சீவி(20) ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏழரை பவுன் நகைகளும் மீட்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in