பயங்கரம்... சுரங்கத்தில் 1875 அடி ஆழத்தில் லிஃப்ட் அறுத்து விபத்து: உள்ளே சிக்கிய 11 பேரின் கதி?

மீட்பு பணி நடைபெறுகிறது.
மீட்பு பணி நடைபெறுகிறது.

ராஜஸ்தானில் உள்ள சுரங்கத்தில் இருந்த லிஃப்ட் அறுந்து விழுந்ததில் 1875 அடிக்குக் கீழ் சிக்கிய 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 11 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம, ஜுன்ஜுனு மாவட்டத்தில், இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (ஹெச்சிஎல்) நிறுவனத்துக்குச் சொந்தமான கோலிஹான் சுரங்கம் உள்ளது. அங்கு நேற்று இரவு லிஃப்ட் சுரங்கத்தில் இருந்து மேலே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கயிறு சுமார் 1875 அடி கீழே லிஃப்ட் விழுநதது. இந்த விபத்தின் போது கொல்கத்தாவைச் சேர்ந்த விஜிலென்ஸ் குழுவைச் சேர்ந்த சுமார் 14 அதிகாரிகள் சுரங்கத்தில் இருந்தனர்.

விபத்து நடைபெற்ற சுரங்கம்
விபத்து நடைபெற்ற சுரங்கம்

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இன்று காலை 7 மணியளவில், 3 பேர் சுரங்கத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். முதலுதவிக்குப் பிறகு அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும் உள்ளே சிக்கிய 11 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய உள்ளூர் எம்எல்ஏ, தரம்பால் குர்ஜார், " இதுவரை உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. அனைவரும் பாதுகாப்பாக வெளியே வருவார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். சுரங்கத்திற்கு வெளியே மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் குழு தயார் நிலையில் உள்ளன.

இந்த விபத்து தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தனது எக்ஸ் தளத்தில், " ஜுன்ஜுனுவின் கெத்ரியில் உள்ள ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டின் கோலிஹான் சுரங்கத்தில் லிஃப்ட் கயிறு அறுந்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகள் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடையவும், சுரங்கத்தில் சிக்கியவர்கள் பாதுகாப்பாக வெளியேறவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

சுரங்க விபத்து குறித்து காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், " கோலிஹான் சுரங்கத்தில் லிப்ட் கயிறு அறுந்து விபத்துக்குள்ளான செய்தி கவலை அளிக்கிறது. இந்த சுரங்கத்தில் ஏராளமான ஊழியர்கள் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சுரங்கத்தில் சிக்கியுள்ள மக்களை விரைவில் பத்திரமாக மீட்கும் வகையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அரசு மற்றும் நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன். லிப்டில் இருக்கும் மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in