வங்கியில் இருந்து வீடு திரும்பிய இளம்பெண்ணுக்கு லிஃப்ட் கொடுப்பது போல நடித்து பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள குச்சிந்தா பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் வங்கியில் இருந்து வீடு திரும்புவதற்காக நேற்று முன்தினம் மாலை பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது டூவீலரில் வந்த இருவர் அவரிடம் லிஃப்ட் கொடுப்பதாகக் கூறியுள்ளனர். இதை நம்பி டூவீலரில் ஏறிய இளம்பெண்ணை, பல்வேறு இடங்களுக்குச் சென்று அவர்கள் இருவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிய இளம்பெண்ணை கார் ஓட்டுநர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து கோவிந்தபூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடக்கினர். இச்சம்பவம் தொடர்பாக குச்சிந்தா பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, இளம்பெண்ணை பலாத்காரம் செய்த மூவரும் சிக்கினர்.
இதுகுறித்து குச்சிந்தா காவல் துறை அதிகாரி அமிதாப் பாண்டா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்," இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மூன்று பேரை நாங்கள் கைது செய்துள்ளோம். இந்த வழக்கு டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியால் விசாரிக்கப்படுகிறது" என்றார்.
இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர்களிடமிருந்து டூவீலர், கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லிஃப்ட் கொடுப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை மூவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.