மத்தியப் பிரதேசத்தில் 72 மணி நேரத்தில் 3 கொலைகள்: சைக்கோ கொலையாளி படத்தை வெளியிட்ட போலீஸார்

மத்தியப் பிரதேசத்தில்  72 மணி நேரத்தில் 3 கொலைகள்: சைக்கோ கொலையாளி படத்தை வெளியிட்ட போலீஸார்

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 72 மணி நேரத்தில் மூன்று பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி எனக் கருதப்படுபவரின் படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் சாகரில் கடந்த 72 மணி நேரத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் இருவர் ஒரே நபரால் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக சாகர் காவல்துறை அதிகாரிகள், கொலையாளி என சந்தேகிக்கப்படும் மர்மநபரின் படத்தை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், "கான்ட் காவல் நிலைய எல்கையில் ஆக.29ம் தேதி தொழிற்சாலையின் பாதுகாப்பு காவலர் கல்யாண் லோதி(50) சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதே போல சிவில் லைன்ஸ் காவல்நிலைய எல்கையில் கல்லூரியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளியான ஷம்பு நாராயணன்(60) கல்லால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களும் ஆக.29-ம் தேதி நடந்துள்ளன. மற்றொரு சம்பவம் ஆக.30-ம் தேதி நடந்துள்ளது. சாகரில் உள்ள மோதி நகரில் வீட்டுக்காவலாளி மங்கள் அஹிர்வார் தடியால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலைச்சம்பவங்களில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம்" என்றனர்.

இந்த நிலையில் கொலையாளி என சந்தேகப்படும் மர்மநபரின் ஓவியத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தருண் நாயக் இன்று கூறுகையில், " கான்ட் மற்றும் சிவில் லைன்ஸ் காவல் நிலையப் பகுதிகளில் நடந்த கொலைகள் ஒரே மாதிரியாக நடந்துள்ளன. சிசிடிவி காட்சிகள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் கொலையாளியை விரைவில் கைது செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சைக்கோ கொலையாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது" என்றார். மத்தியப் பிரதேசத்தில் இதே போல கடந்த 2018-ம் ஆண்டில் 34 டிரக் டிரைவர்கள் மற்றும் கிளீனர்களைக் கொன்றதாகக் கூறப்படும் சைக்கோ கொலையாளி ஆதேஷ் கம்ராவை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in