
அரசு பேருந்தும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு, நேர் மோதிக் கொண்டதில் 3 வயது சிறுமி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்றுபேர் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மெதுகும்மல் அருகே உள்ள கூட்டப்புளி பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ்(30). வெளிநாட்டில் வேலை செய்துவந்த இவர் அண்மையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அடுத்தவாரம் மீண்டும் வெளிநாடுக்கு செல்ல இருந்தார்.
இந்த நிலையில் அருள்ராஜ் தனது மனைவி சுபிஜா(27), மகள் அஸ்வந்திகா(3) ஆகியோருடன் நேற்று இரவு 10 மணியளவில் குழித்துறை பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அருள்ராஜின், அண்ணனுக்கு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்திருந்ததால் அதைப் பார்த்துவிட்டு இவர்கள் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். குழித்துறையை அடுத்த கல்லுக்கெட்டில் பகுதியில் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டு இருந்த அரசு பேருந்து இவர்களது பைக்கின் மீது மோதியது. இதில் பைக்கில் பந்த அருள்ராஜ், சுபிஜா, அஸ்வந்திகா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். களியக்காவிளை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தோரின் சடலங்களை மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சாலை விபத்தில் மூன்று வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.