கஞ்சா விற்பனை செய்த மருத்துவம், பொறியியல் மாணவர்கள்: ரோந்துப் பணியில் போலீஸ் அதிர்ச்சி

கஞ்சா விற்பனை செய்த மருத்துவம், பொறியியல் மாணவர்கள்: ரோந்துப் பணியில் போலீஸ் அதிர்ச்சி

சிதம்பரத்தில் 6 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக  வைத்திருந்த  மருத்துவ மாணவர்கள் மூன்று பேரையும், ஒரு  பொறியியல் மாணவரையும்  போலீஸார்  கைது செய்துள்ளனர். 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆறுமுகம்,  சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் போலீஸார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவகாமி அம்மன் நகரில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை  பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது, அதில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 4 பேரையும் போலீஸார்  பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் வாணியம்பாடி நியூடவுன், புதுத்தெருவை சேர்ந்த நெடுஞ்செழியன் (24), சென்னை அடையார் காந்திநகர் மெயின் ரோடு  ஹாபிஸ் (23), சிதம்பரம் எம்.கே.தோட்டம் பிச்சமுத்து நகர் ஆகாஷ் (22), கள்ளக்குறிச்சி ராமச்சந்திரா நகரை சேர்ந்த ராகுல் (25) என்பதும்,  அவர்கள் சக மாணவர்களிடம் விற்பனை செய்வதற்காக  6 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.  

இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார்  அவர்களிடமிருந்த 6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதில் நெடுஞ்செழியன், ஹாபிஸ், ராகுல் ஆகிய 3 பேரும் அண்ணாமலை நகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார்கள். ஆகாஷ் அண்ணாமலைநகர் பொறியியல் கல்லூரியில் பொறியியல்  4 -ம் ஆண்டு படித்து வருகிறார். 

விற்பனைக்காக மாணவர்கள் கஞ்சா வைத்திருந்த சம்பவம் சிதம்பரம்  பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in