
பட்டா வாங்கித் தருவதாக கூறி 3 லட்சம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட போலி அரசு அதிகாரி மீது மூதாட்டி ஆதாரங்களுடன் பலமுறை புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மூதாட்டி வேதனை அடைந்துள்ளார்.
சென்னை புழல் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் வனஜா(71). கணவரை இழந்த மூதாட்டி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், புழல் பகுதியில் தனக்கு சொந்தமாக 22 சென்ட் நிலம் இருக்கிறது. அதற்கு பட்டா பெறுவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு மாதவரம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றபோது தனது மகன் நண்பர் மூலம் இளையராஜா என்பவர் அறிமுகமானார். அப்போது இளையராஜா தான் அரசு உயர் அதிகாரி, மாவட்ட ஆட்சித் தலைவர் தனது நெருக்கிய நண்பர் ஆகையால் ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு பட்டா வாங்கி தருவதாக கூறினார்.
பின்னர் 5 லட்ச ரூபாய் கொடுத்தால் உடனடியாக பட்டா வாங்கித் தருவதாக கூறியதை நம்பி கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் இளையராஜாவிடம் 3 லட்ச ரூபாய் கொடுத்தேன். அண்ணாநகரில் சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் மகனுடன் சென்று 3 லட்சம் பணம் கொடுத்தேன். ஆனால் நீண்ட நாட்களாகியும் இளையராஜா பட்டா வாங்கித் தராமல் ஏமாற்றியதால் அவர் பற்றி விசாரித்த போது இளையராஜா அரசு அதிகாரி இல்லை என்பதும், காங்கிரஸ் கட்சியில் இருப்பது தெரியவந்தது. பின்னர் பணத்தை திரும்ப கேட்டபோது இளையராஜா மிரட்டும் துணியில் பேசியதுடன் அனைத்து இடங்களிலும் தனக்கு செல்வாக்கு இருப்பதால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டினார்" என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததற்கான ரசீது வழங்கப்பட்டது.
இதுகுறித்து மூதாட்டி வனஜா கூறுகையில், "இளையராஜா தனியார் உணவு விடுதியில் பணம் வாங்கும் வீடியோ காட்சி மற்றும் மிரட்டும் ஆடியோ உள்ளிட்டவற்றை ஆதாரமாக கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் அழைக்கழித்து வருகின்றனர். காவல் நிலையங்களில் புகார் அளிக்கும் பொதுமக்களிடம் புகாரை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், காவல் நிலையங்கள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை வரும்படி காவலர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் உத்தரவை காவல்துறையினர் காற்றில் பறக்கவிட்டுவிட்டனர். தான் அளித்த புகாரில் ஆதாரங்கள் இல்லையென்றும் நீதிமன்றத்தை நாடுமாறு போலீஸார் கூறுவது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது'' என்று கண்ணீர் மல்க கூறினார்.
சமீபத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற சட்ட-ஒழுங்கு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர், காவல் நிலையங்களுக்கு பெண்கள் புகார் அளிக்க வரும்போது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக காவல்துறைக்கு அறிவுரை வழங்கிய நிலையில் மூதாட்டி ஒருவர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் 6 முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.