
சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கான நியமன எம்.பி-க்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர் நியமனம் செய்யப்படுகின்றனர்.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு 9 நியமன எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதற்காக 30 பேரின் பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவர்களில் 9 பேரை முன்னாள் அவைத் தலைவர் தான் சுவான் ஜின் தலைமையிலான சிறப்பு தேர்வுக் குழு தேர்ந்தெடுத்தது. தேர்வு செய்யப்பட்ட 9 நியமன எம்.பி-க்களில், 3 பேர் இந்திய வம்சவாளியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சிங்கப்பூர் இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் தலைவர் நிமில் ரஜினிகாந்த் பரேக், ப்ளூரல் ஆர்ட் பத்திரிகையின் இணை நிறுவனர் சந்திரதாஸ் உஷா ராணி, வழக்குரைஞர் ராஜ் ஜோஷுவா தாமஸ் ஆகிய மூவரும் இந்த இந்திய வம்சாவளியினர் ஆவர். இவர்களில் ராஜ் ஜோஷுவா இரண்டாவது முறையாக நியமன எம்பியாகி உள்ளார். இவர் சிங்கப்பூர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
நியமன எம்.பி.க்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 9 பேரையும் இரண்டரை ஆண்டு பதவிக்காலத்துக்கு சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகோப், வரும் 24-ம் தேதி நியமனம் செய்வார். அவர்கள் அனைவரும் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றம் கூடும்போது பதவியேற்பார்கள்.