
கிர் தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்து மூன்று சிங்கங்களை தங்கள் வாகனத்தில் துரத்திச் செல்லும் வீடியோ வைரலானதை அடுத்து, குஜராத்தின் ஜுனாகர் வனத்துறையினர் மூன்று பேரை கைது செய்தனர்.
சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவில், ஓடும் காரின் பானட்டில் அமர்ந்து ஒரு நபர் மூன்று அம்ரேலி சிங்கங்களை துரத்தும் காட்சிகள் வெளியானது. கிர் தேசிய பூங்காவில் சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்த ஆறு பேர் கொண்ட கும்பல், 3 சிங்கங்களை தொந்தரவு செய்யும் காட்சிகள் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவில், வாகன வெளிச்சத்தைப் பார்த்து சிங்கங்கள் முன்னோக்கி பயந்து செல்லும்போது, ஒரு நபர் காரின் பானெட்டில் அமர்ந்தபடி துரத்தி செல்கிறார்.
இந்த வீடியோ காட்சி வெளிவந்தவுடன், வனத்துறையினர் விசாரணையில் இறங்கி வைரலான வீடியோவில் காணப்பட்ட நபரை அடையாளம் கண்டுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் ராஜஸ்தானில் இருந்து கிர் தேசிய பூங்காவிற்கு வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாகப் பேசிய தலைமை வனப் பாதுகாவலர் ஆராதனா ஷாஹு, "வீடியோ வெளியானதை அடுத்து, 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது, இரவில் சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் நுழைந்ததாகவும், சிங்கங்களை துன்புறுத்தியதாகவும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என கூறினார்.