நள்ளிரவில் வெடித்துச் சிதறிய ஃபிரிட்ஜ்: துக்க நிகழ்விற்காகத் துபாயிலிருந்து வந்த மூவர் பலி!

நள்ளிரவில் வெடித்துச் சிதறிய ஃபிரிட்ஜ்: துக்க நிகழ்விற்காகத் துபாயிலிருந்து வந்த மூவர் பலி!

சென்னை அடுத்துள்ள ஊரப்பாக்கத்தில் ஃபிரிட்ஜ் வெடித்ததில் மூவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது ஊரப்பாக்கம். இப்பகுதியில் உள்ள கோதண்டராமன் நகரில் வசிக்கும் கிரிஜா என்பவரின் வீட்டில் வெங்கட்ராமன் என்பவருக்குத் திதி கொடுக்கும் சடங்கு நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்விற்காகக் கிரிஜாவின் உறவினர்களான கிரிஜா( 63), அவரின் தங்கை ராதா(55), ராஜ்குமார்( 48) ஆகியோர் நேற்று முன்தினம் துபாயிலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் மூவரும் ஒரே அறையில் படுத்து உறங்கினார்கள். நேற்று இரவு மின்கசிவு காரணமாக ஃபிரிட்ஜ் வெடித்துள்ளது.

அந்த அறையிலிருந்து கரும்புகை வெளியேறிய காரணத்தால் பக்கத்து அறையில் படுத்து உறங்கிய பார்கவி என்பவர் அந்த அறையைத் திறக்க முயன்றுள்ளார். அறையைத் திறக்க முடியாத காரணத்தால் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். தீயணைப்புத் துறையினர் அறையின் கதவை உடைத்து திறந்தனர். அப்போது அறையில் படுத்து உறங்கிய கிரிஜா,  ராதா, ராஜ்குமார் ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதில்  பலத்த காயமடைந்த பாரதி,  ஆராதயா(6) ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக அந்த ப்ரிட்ஜ் பயன்படுத்தாமலேயே இருந்த காரணத்தால் விபத்து ஏற்பட்டிருப்பதாக காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in