
விழுப்புரம் அன்பு இல்லம் ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட எட்டு பேரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த ஜாபருல்லா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பது என அடுக்கடுக்கான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.
இதனைத்தொடர்ந்து ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் 7 பேர் உள்ளிட்ட 9 பேர் கெடார் போலீஸாரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இதனையடுத்து அன்பு ஜோதி ஆசிரம வழக்கு விசாரணையை மேற்கொள்ள விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் 4 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 15 சிபிசிஐடி காவலர்களைக் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம மேலாளர் பிஜூ மோகன் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட எட்டு பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை இன்று விசாரணை செய்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புஷ்பராணி, அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியாஜூபின், பிஜூ மோகன், பூபாளன், முத்துமாரி, கோபிநாத், ஐயப்பன், சதீஷ் ஆகிய எட்டு பேரையும் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கவும் பிப்.28 ம் தேதி காலை 10 மணிக்கு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் 8 பேரையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ள சிபிசிஐடி போலீஸார் ரகசிய இடத்தில் தங்கவைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.