அதிக வட்டி ஆசைகாட்டி 3 கோடி சுருட்டிய தனியார் நிதி நிறுவனம்: தென்காசியில் பாதிக்கப்பட்டோர் புலம்பல்

அதிக வட்டி ஆசைகாட்டி 3 கோடி சுருட்டிய தனியார் நிதி நிறுவனம்: தென்காசியில் பாதிக்கப்பட்டோர் புலம்பல்

தென்காசியில் அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி 3 கோடி ரூபாய் வரை சுருட்டியவரிடமிருந்து தங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கீழபாறையடி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி. திருமணமான இவர் திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட 'நியூ ரைஸ் ஆலயம்' என்ற தனியார் நிதி நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களிடம் அதிக வட்டிக்குப் பணம் தருவதாக கூறி மக்களிடம் பணத்தை பெற்றுள்ளார்.

அப்படி வாங்கிய பணத்தைக் கடந்த ஒரு வருடமாகத் திரும்ப தராமல் முதலீட்டாளர்களை ஆறுமுகசாமி ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்குச் சொந்த ஊருக்கு ஆறுமுகசாமி வந்துள்ளதாக தகவல் கிடைக்கவே ஏராளமான மக்கள் சென்றனர். இந்த நிலையில், நேற்று அவரது வீட்டின் கதவைப் பூட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்," அதிக வட்டிக்கு பணம் தருவதாக நம்பி, எங்கள் பகுதியில் உள்ள 80-க்கும் மேற்பட்டோர் வீடுகளை அடகு வைத்தும், குழந்தைகளுக்காக சேர்த்து வைத்த பணம், நகை என அனைத்தையும் செலுத்தி உள்ளோம். எங்கள் பகுதியில் மட்டும் சுமார் ரூ.3 கோடி வரை ஆறுமுகசாமி மோசடி செய்துள்ளார். இந்நிலையில் வட்டியும் தரவி்ல்லை, அசலும் திரும்பத் தரவில்லை. இது தொடர்பாக ஆறுமுகசாமியிடம் கேட்கும் போது உரிய பதிலும் அளிப்பதில்லை. எனவே, வேறு வழியின்றி அவரது வீட்டைப் பூட்டி முற்றுகையிட்டுள்ளோம். எங்களுடைய பணம் கிடைக்க உரிய வழிவகை செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிறுவனம் மீது சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அமுதசுரபி என்ற நிறுவனம் ஏராளமானவர்களிடம் முதலீடுகளைப் பெற்று இரவோடு இரவாக கடந்த ஆண்டு தலைமறைவாகிய நிலையில் தற்போது நியூ ரைஸ் நிறுவனமும் ஏமாற்றியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in