காலை உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி; 11 பேருக்கு தீவிர சிகிச்சை: கெட்டுப்போனதால் நடந்த விபரீதம்

காலை உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி; 11 பேருக்கு தீவிர சிகிச்சை: கெட்டுப்போனதால் நடந்த விபரீதம்

திருப்பூர் அருகே கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி அடுத்த திருமுருகன் பூண்டியில் விவேகாந்தா சேவாலயம் என்ற தனியார் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர், சிறுமிகள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் சிறுவர், சிறுமிகள் காலை உணவு அருந்தினர். சாப்பிட்ட சில நிமிடங்களில் 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிறுவர், சிறுமிகள் அனுமதிக்கப்பட்டனர். இதில் 3 சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கௌதம், சதீஷ், ஹரிணி, சபரி, குணா, ரித்தீஷ், ஹர்சன் உள்பட 11 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத்

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காப்பகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் குழந்தைகள் இறந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர், சிறுமிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் சந்தித்து பேசினார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர் சிறுமிகளின் சிறுநீர், மலம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்பு உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். 3 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

காப்பகத்தில் 3 குழந்தைகள் இறந்ததற்கு கெட்டுப்போன உணவே காரணம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in