பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட கல்லூரி மாணவர்கள்: பெங்களூரு போலீஸார் அதிரடி நடவடிக்கை!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட கல்லூரி மாணவர்கள்: பெங்களூரு போலீஸார் அதிரடி நடவடிக்கை!

"பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று முழக்கமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, நியூ ஹாரிசான் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேரை பெங்களூரு போலீஸார் கைது செய்தனர்.

நியூ ஹாரிசான் பொறியியல் கல்லூரி நவம்பர் 25-26 தேதிகளில் கல்லூரிகளுக்கு இடையேயான விழாவை நடத்தத் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது சில மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎஸ்) அணிகள் மற்றும் நாடுகளின் பெயர்களைச் சொல்லி கோஷமிட்டனர். அப்போது 17 முதல் 18 வயதுக்குட்பட்ட ஆர்யன், தினகரன் மற்றும் ரியா ஆகிய மூன்று மாணவர்கள் திடீரென "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கூச்சலிட்டனர். மற்றொரு மாணவர் இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்தார்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து கலவரத்தைத் தூண்டும் நோக்கம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கம், ஆத்திரமூட்டும் நோக்கம் ஆகிய பிரிவுகளின்கீழ் மாணவர்கள் மீது பெங்களூரு மாரத்தஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஒயிட்ஃபீல்டு துணை போலீஸ் கமிஷனர் பேசுகையில், “மாணவர்கள் வேடிக்கையாக கோஷம் எழுப்பியுள்ளனர், அவர்களின் நண்பர் ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்தார். கல்லூரி நிர்வாகம் அவர்களை சஸ்பெண்ட் செய்து எங்களிடம் புகார் அளித்தது. முதலில் அவர்களை கைது செய்து ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தோம். பின்னர் அவர்கள் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த செயல் வேண்டுமென்றே செய்யப்படவில்லை. மேலும், அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகக் கூறியுள்ளனர்" என தெரிவித்தார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in