வசூல்ராஜா படப்பாணியில் நடந்த ராணுவத் தேர்வு: சிக்கிய 29 வடமாநில இளைஞர்கள்

வசூல்ராஜா படப்பாணியில் நடந்த ராணுவத் தேர்வு: சிக்கிய 29 வடமாநில இளைஞர்கள்

பாதுகாப்பு அமைச்சக தேர்வுகளின் போது வசூல்ராஜா திரைப்பட பாணியில் முறைகேடு செய்து தேர்வு எழுதிய 29 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தொடர்பான கீழ்நிலைப் பணிகளுக்கு நேற்று காலை மற்றும் மாலை வேளைகளில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. சென்னை, நந்தம்பாக்கம் எம்எச்சாலையில் உள்ள ஆர்மி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற இந்த தேர்வில் 1728 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

இந்த தேர்வில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இத்தேர்வின் போது ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த 29 இளைஞர்கள் சிறிய ரக ‘ப்ளூ டூத்’ கருவியைப் பயன்படுத்தித் தேர்வு எழுதினர். அப்போது வெளியிலிருந்து அவர்கள் விடைகளை ப்ளூ டூத் மூலம் ரகசியமாகப் பெற்று தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதுபோல் சஞ்சய் என்பவருக்குப் பதிலாக சுக்ரா என்பவர் தேர்வு எழுதியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடுகளுக்கு வெளியிலிருந்து உதவி செய்தவர்கள் குறித்து காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வசூல் ராஜா திரைப்படத்தில் கமல்ஹாசன், ஆள்மாறாட்டம் செய்தும், ப்ளூ டூத் மூலமும் தேர்வுகளில் கலந்து கொள்வார். அதே போன்று இந்த தேர்விலும் நடைபெற்றுள்ளது. ‘நீட் தேர்வுகளுக்கு மட்டும் காதில் டார்ச் அடித்து சோதனை செய்கிறார்கள். ராணுவ தேர்வுகளுக்கு ஏன் இதுபோல் செய்வதில்லை’ என சமூக வலைத்தளங்களில் ராணுவத் தேர்வு குறித்து விவாதிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in