281 பவுன் நகை திருட்டால் ஊழியர்கள் அதிர்ச்சி: சோளக்காட்டில் வைத்து பங்கு போட்ட கொள்ளையர்கள்!

குமரன் சொர்ண மஹால்
குமரன் சொர்ண மஹால்

கள்ளக்குறிச்சி அருகே நகைக் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த 281 சவரன் நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே புக்கிரவாரி-புதூர் சாலையில் குமரன் சொர்ண மஹால் என்ற நகைக்கடை உள்ளது. இன்று காலையில் கடையின் ஊழியர்கள் வந்து கடையை திறக்க முற்பட்டபோது கடையில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து நகைக்கடை உள்ளே சென்று பார்த்தபோது உள்ளிருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

கடை உரிமையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 281 சவரன் நகைகள், 30 கிலோ வெள்ளி, ஒரு லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன், டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

கொள்ளையடித்த நகைகளை அருகில் உள்ள சோளக்காட்டு பகுதிக்கு எடுத்துச் சென்று கொள்ளையர்கள் பங்கு பிரித்து சென்றுள்ளது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. நகைகள் வைத்திருந்த பெட்டிகள், பைகளை அப்பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். அங்கு சிறு மூக்குத்திகள், சிறு வளையங்கள் கிடந்ததை போலீஸார் கண்டறிந்து, அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகை கடை பூட்டை உடைத்து பெரிய அளவில் நகைகள், வெள்ளிப் பொருட்கள், பணம் உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in