பனிப்பொழிவு, மழை காரணமாக இமாசல பிரதேசத்தில் 278 சாலைகள் மூடல்!

பனிப்பொழிவு, மழை காரணமாக இமாசல பிரதேசத்தில் 278 சாலைகள் மூடல்!

இமாசல பிரதேசத்தின் உயரமான பகுதிகள் இன்று லேசானது முதல் மிதமான பனிப்பொழிவைக் கண்டது. அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் இடைவிடாத மழையும் பெய்தது, இதன் காரணமாக 278 சாலைகள் மூடப்பட்டன.

இமாசல பிரதேச மாநிலம் குலுவில் உள்ள ஜலோரி ஜோட் பகுதியில் 60 செமீ பனியும், ரோஹ்தாங் கணவாய் பகுதியில் 45 செமீ பனியும், அடல் சுரங்கப்பாதையின் தெற்கு வாசல் மற்றும் சான்சல் ஆகிய பகுதிகளில் 30 செமீ பனிப்பொழிவும் பதிவாகியுள்ளது. சௌர்தார் மற்றும் டோட்ராக்வாரில் 25 செ.மீ., கத்ராலாவில் 16 செ.மீ. மற்றும் சிம்லாவில் உள்ள ஜாகோ சிகரம் மற்றும் குஃப்ரியை ஒட்டியுள்ள பகுதிகளில் 3 முதல் 10 செ.மீ பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. மணாலி, கோஹர் மற்றும் டிண்டர் ஆகிய இடங்களில் முறையே 16 மிமீ, 11 மிமீ மற்றும் 8.3 மிமீ மழையும், நஹன் மற்றும் பூந்தர் பகுதிகளில் 5.7 மிமீ மழையும் பதிவாகியுள்ளன.

பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக தேசிய நெடுஞ்சாலை 3 மற்றும் 305 ரோஹ்தாங் கணவாய் மற்றும் ஜலோரி கணவாய் ஆகிய சாலைகள் மூடப்பட்டன. அதே நேரத்தில் என்எச் 505-ன் கிராம்பு முதல் லோசார் வரையிலான பாதையும் மூடப்பட்டது. லாஹவுல் மற்றும் ஸ்பிதியில் 177 சாலைகளும், சிம்லாவில் 64 சாலைகளும், கின்னூரில் 9 சாலைகளும், சம்பாவில் 5 சாலைகளும், குலுவில் 3 மற்றும் காங்க்ரா மற்றும் சிர்மௌர் மாவட்டங்களில் தலா 2 சாலைகளும் வாகனப் போக்குவரத்துக்காக மூடப்பட்டன.

வரும் ஜனவரி 21 மற்றும் 22 ம் தேதிகளில் லேசான மழை மற்றும் பனிப்பொழிவு, ஜனவரி 23-ம் தேதி நடுத்தர மற்றும் உயரமான மலைகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான பனியும், ஜனவரி 26-ம் தேதி வரை ஈரமான வானிலை இருக்கும் என்றும் இமாசல பிரதேச வானிலை அலுவலகம் கணித்துள்ளது.

இந்த ஈரமான வானிலை சுற்றுலாப் பயணிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஆப்பிள் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இது தொடர்பாக சுற்றுலாத் தொழில் பங்குதாரர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. சேத் கூறுகையில், “மாநிலத் தலைநகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பனிப்பொழிவைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலைக்குள் ஹோட்டல்களில் தங்கும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 30 முதல் 70 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in