சிக்கவைக்கப்பட்ட பெண் அதிகாரி; சிக்கிய கிராமப்புற சுகாதார சேவை இயக்குநர்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

சிக்கவைக்கப்பட்ட பெண் அதிகாரி; சிக்கிய கிராமப்புற சுகாதார சேவை இயக்குநர்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

மதுரை மண்டலத்திற்கு தேவைக்கு அதிமாக உயிர் காக்கும் உள்ளிட்ட மருந்துகளை வாங்கி காலாவதியாக்கி அரசுக்கு 27 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்திய முன்னாள் மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்குநர் டாக்டர்.இன்பசேகரன் உள்ளிட்ட நான்கு உயர் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தனர்.

2017- 18-ம் ஆண்டில் மதுரை மண்டலத்திற்கு தேவையான மருந்துகள் எவ்வளவு? என்பது குறித்து இ.எஸ்.ஐயில் மெடிக்கல் ஸ்டோர் அதிகாரியாக பணியாற்றி வந்த கல்யாணி என்பவர் பட்டியல் எடுத்துள்ளார். அதில் மதுரை மண்டலத்தில் உள்ள 65 இ.எஸ்.ஐ மையங்களுக்கு 13 கோடியே 12 லட்சத்து 52 ஆயிரத்து 93 ரூபாய் மதிப்பிலான மருந்துகள் தேவைப்படுவதாக பட்டியல் தயார் செய்து பின்னர் மத்திய மருந்து ஸ்டோர் மருத்துவ அதிகாரியான சிட்டிபாபு என்வரிடம் ஆலோசனை பெற்று அந்த பட்டியலை கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மண்டல நிர்வாக மருத்துவ அதிகாரி ஜான் ஆண்ட்ரூக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த பரிந்துரை பட்டியலை மண்டல நிர்வாக மருத்துவ அதிகாரி ஜான் ஆண்ட்ரூ, அப்போதைய இயக்குநராக இருந்த இன்பசேகரனுக்கு அனுப்பினார். இந்த பட்டியலை வைத்து இயக்குநராக இருந்த இன்பசேகரன் மற்றும் மண்டல நிர்வாக மருத்துவ அதிகாரி ஜான் ஆண்ட்ரூ, கண்காணிப்பாளராக பணிபுரிந்த அசோக்குமார் தற்போது பணிபுரிந்து வரும் அமர்நாத் ஆகியோர் கூட்டாக சேர்ந்து மோசடி செய்ய திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் கூட்டாக சேர்ந்து 40.29 கோடி ரூபாய் அளவிற்கு மருந்துகள் மதுரை மண்டலத்திற்கு தேவைப்படுவதாக போலியாக ஆவணங்கள் தயாரித்தது தெரியவந்தது. இவ்வாறு மூன்று மடங்கு தேவைக்கு அதிகமாக வாங்கப்பட்ட மருந்துகள் பயன்பாடு இல்லாமல் காலாவதி ஆகி போனது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் உயிர்காக்கும் மருந்துகளும் அதிக அளவில் வாங்கப்பட்டு வீணானதும், இதன் மூலம் அரசுக்கு சுமார் 27 கோடியே 16 லட்சத்து 78 ஆயிரத்து 97 ரூபாய் இழப்பு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை மண்டலத்திற்கு அதிகப்படியான மருந்துகள் தேவையில்லை என மருத்துவ அதிகாரிகள் மண்டல மருத்துவ நிர்வாக அதிகாரியான ஜான் ஆண்ட்ரூவின் கவனத்திற்கு கொண்டு வந்தும் அதைக் கண்டு கொள்ளாமல் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார். மேலும் தேவையைவிட மூன்று மடங்கு அதிகமாக 40 கோடி ரூபாய் அளவிற்கு மதுரை மண்டலத்திற்கு மருந்துகள் வாங்குவதாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் மதுரை மண்டல மருத்துவ அதிகாரி கல்யாணி கையெழுத்து இட மறுத்ததால், கடந்த 2018-ம் ஆண்டு மோசடியில் ஈடுபட்ட இஎஸ்ஐ இயக்குநர், மண்டல நிர்வாக மருத்துவ அதிகாரி மற்றும் கண்காணிப்பாளர்கள் கூட்டு சேர்ந்து கல்யாணியை எந்தவித காரணமின்றி பணியிட மாற்றம் செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட கல்யாணி மீது தவறாக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தி மெமோ கொடுத்து அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடிக்கு உடந்தையாக செயல்படாததால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அறிந்து கொண்ட கல்யாணி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மருத்துவ அதிகாரி கல்யாணி பணியிட மாற்றம் மற்றும் உயரதிகாரிகள் வழங்கிய மெமோ ஆகியவற்றிற்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் அரசு தரப்பில் அக்கவுண்ட் ஜெனரல் மதுரை மண்டலத்தில் மருந்துகள் தேவை குறித்த வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்த போது அதிகப்படியான மதிப்பில் மருந்துகள் வாங்கப்பட்டதும் உறுதியானது.

விசாரணையில் தெரியவந்த உண்மைகளை அடிப்படையாக வைத்து மதுரை மண்டலத்திற்கு மருத்துவ அதிகாரி கல்யாணி சுமார் 13 கோடி ரூபாய் அளவில் மருந்துகள் தேவை என பரிந்துரைத்த பின்னர், மோசடி செய்யும் நோக்கில் மருத்துவம் மற்றும் கிராமப்புற சேவை இஎஸ்ஐ இயக்குநர் இன்பசேகரன் மற்றும் மண்டல நிர்வாக மருத்துவர் ஜான் ஆண்ட்ரூ, கண்காணிப்பாளர்கள் அசோக்குமார் மற்றும் அமர்நாத் ஆகியோர் கூட்டாக சேர்ந்து மூன்று மடங்கு மருந்துகள் வாங்குவதற்காக 40 கோடி ரூபாய் அளவில் ஆவணங்கள் போலியாக தயாரித்தது உறுதியானது. இதற்கு உடந்தையாக செயல்பட மறுத்த மதுரை மண்டல மருத்துவ அதிகாரி கல்யாணியை தேவையில்லாமல் பணியிட மாற்றம் செய்து குற்றச்சாட்டுகள் சுமத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதன் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in