மதுரை தெப்பக்குளத்தில் மிதந்த உடல்: நடைப்பயிற்சிக்கு சென்றவர்கள் அதிர்ச்சி!

மதுரை தெப்பக்குளத்தில் மிதந்த உடல்: நடைப்பயிற்சிக்கு சென்றவர்கள் அதிர்ச்சி!

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் மிதந்த 25 வயது மதிக்கத்தக்க திருநங்கையின் உடலை மீட்ட காவல்துறையினர் இறப்புக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை தெற்கு பகுதி வைகை ஆற்றை ஓட்டியுள்ள இடத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மாரியம்மன் தெப்பக்குளம். இங்கு கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை தெப்பக்குளத்திற்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள வழக்கம் போல் வருபவர்கள் தெப்பக்குளம் தண்ணீரில் ஏதோ உடல் போல் ஒன்று மிதப்பதைக் கண்டுள்ளனர்.

உடனடியாக இது குறித்து, அருகில் உள்ள தெப்பக்குளம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்து உடல் ஒன்று மதிப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து, மதுரை அனுப்பானடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரில் இருந்த உடலை மீட்டனர். இறந்துகிடந்தது 25 வயது மதிக்கத்தக்க திருநங்கை என்பது அடையாளம் காணப்பட்டது.

பின்பு தெப்பக்குளம் காவல்துறையினர் அங்க அடையாளங்களைக் குறித்துக்கொண்டு உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தெப்பக்குளத்தில் விழுந்து திருநங்கை தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காராணமா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in