
பீகார் மாநிலத்தில் ஜிவித்புத்ரியா பண்டிகையின்போது விரதம் இருந்து நீராடச்சென்ற பெண்கள் 24 பேர், நீரில் மூழ்கி பலியாகியிருப்பது அந்த மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட இந்தியாவின் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்களிலும், அண்டை நாடான நேபாளத்திலும் இந்த மாதத்தில் ஜிவித்புத்ரிகா எனும் பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. மொத்தம் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் இந்த ஜிவித்புத்ரிகா பண்டிகையின்போது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக நோன்பு இருப்பார்கள்.
மூன்று நாள் நோன்பு முடிவில் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடி தங்கள் விரதத்தை முடிப்பார்கள். அப்படி நேற்று நடந்த இந்த பண்டிகையின்போது நீர் நிலைகளில் நீராடிய பெண்கள் 24 பேர் பலியாகினர்.
போஜ்பூரில் ஐந்து பேரும், ஜெகன்பாத்தில் 4 பேரும், பாட்னா மற்றும் ரோகத்ஸ் பகுதிகளில் தலா மூன்று பேரும் தர்பங்கா மர்ரும் நவடா ஆகிய மாவட்டங்களில் இரண்டு பேரும் கைமுமர், மதேபுரா மற்றும் அவுரங்கபாத் மாவட்டங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 24 பேர் ஒரே நாளில் நீரில் மூழ்கி பலியாகினர்.
இந்த உயிரிழப்பு தொடர்பாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரு. 4 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார். ஓரே நாளில் பீகாரில் வெவ்வேறு இடங்களில் மொத்தம் 24 பேர் பலியானது அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.