சுருக்குமடி வலையால் மீனவர்களுக்குள் மோதல் அபாயம்: 3 கிராமங்களில் போலீஸ் குவிப்பு

சுருக்குமடி வலையால் மீனவர்களுக்குள் மோதல் அபாயம்: 3 கிராமங்களில் போலீஸ் குவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் சுருக்குமடி வலை விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள பதற்றம் காரணமாக  மூன்று மீனவர் கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில்  உள்ள  சில மீனவ கிராமங்களில்  மீனவர்கள் சிலர் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படியே சுருக்கு மடி வலையை பயன்படுத்தி  மீன் பிடிப்பதற்கு அப்பகுதி கிராமங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இதன் காரணமாக நடுக்கடலில் மீனவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு போலீஸார்  துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவமும் நடந்தது.

குறிப்பாக  வீராம்பட்டினம், வம்பா கீரப்பாளையம்,  நல்லவாடு ஆகிய மூன்று மீன்பிடி துறைமுகங்களில் சுருக்குமடி வலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தக் கூடாது என மீனவர்கள் தொடர்ந்து பிரச்சினை செய்து வருகின்றனர்.  சுருக்கு மடிவலையை பயன்படுத்தும் பிரச்சினையில் மீனவர்கள் இரு பிரிவாக இருப்பதால் பதற்றம் இருந்து கொண்டே இருக்கிறது.

அதனால் அந்த மூன்று மீன்பிடி துறைமுகங்களிலும், கிராமத்தின் அனைத்து பகுதிகளிலும்  நூற்றுக்கு மேற்பட்ட புதுச்சேரி மாநில போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் அங்கிருக்கும் போலீஸார் மீனவர்கள் கடலுக்குச் செல்வதையும், மீனவர்களுக்குள் மோதல் ஏற்படாமலும்  கண்காணித்து தடுத்து வருகின்றனர்.  சுருக்கு மடிவலையைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீனவர் கிராமப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால்  அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in