`225 கோடி நஷ்டம்; பெங்களூருவை விட்டு வெளியேறுவோம்'- கர்நாடக முதல்வரை எச்சரிக்கும் ஐடி நிறுவனங்கள்

`225 கோடி நஷ்டம்; பெங்களூருவை விட்டு வெளியேறுவோம்'- கர்நாடக முதல்வரை எச்சரிக்கும் ஐடி நிறுவனங்கள்

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு மோசம் அடைந்துள்ளதால் 225 கோடி நஷ்டம் அடைந்துள்ளோம் என்றும் இதனால் பெங்களூருவை விட்டு வெளியேறுவோம் என்றும் கர்நாடக முதல்வருக்கு மென்பொருள் நிறுவன கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

கடந்த சில மாதங்களாக கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்குள்ள கபினி உள்பட முக்கிய அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், பெங்களூருவில் 2 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நகரமே வெள்ளத்தில் மிதப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் மிகவும் மோசம் அடைந்துள்ளது. முக்கியமாக பெங்களூருவில் ஐடி நிறுவனங்கள் அதிகமாக இருக்கின்றன. மோசமான சாலைகள், மின்தடை, குடிநீர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளால் பெங்களூரு நகரம் சிக்கி தவிர்த்து வருகிறது.

பெங்களூருவில் கடந்த ஆகஸ்ட் 27 மற்றும் 28-ம் தேதிகளில் மென்பொருள் நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் சாலைகள் வெள்ள நீரில் மிதக்கின்றன. இதனால் ஊழியர்கள் பணிக்கு வர முடியாமல் போனது. நகரின் உட்கட்டமைப்பு சரியில்லாதது தான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள மென்பொருள் நிறுவன கூட்டமைப்பு, இதனால் பல நிறுவனங்கள் பெங்களூருவை விட்டு வெளியேறக் கூடும் என்று எச்சரித்துள்ளது.

இதனிடையே, பெங்களூருவில் நகரின் உட்கட்டமைப்பு சரியில்லாததால் கடந்த வாரம் பெய்த மழையால் 225 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மென்பொருள் நிறுவன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மென்பொருள் நிறுவன கூட்டமைப்பு சார்பில் மீண்டும் கர்நாடக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், உடனடியாக ஒயிட்ஃபீல்டு பகுதியில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in