தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் அதிருப்தி: ஒரே நேரத்தில் 22 தலைவர்கள் விலகல்!

சிராக் பாஸ்வான்
சிராக் பாஸ்வான்

பீகாரில் மக்களவைத் தேர்தலில் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுகளை சிராக் பாஸ்வான் விற்று விட்டதாக குற்றம் சாட்டி, லோக் ஜனசக்தி கட்சியிலிருந்து 22 தலைவர்கள் ஒரே நேரத்தில் விலகியுள்ளனர்.

லோக் ஜனசக்தி கட்சி
லோக் ஜனசக்தி கட்சி

பீகாரில் லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) தலைவராக இருந்த ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்குப் பிறகு, அக்கட்சி இரண்டாக உடைந்தது. ராம் விலாஸ் பாஸ்வானின் இளைய சகோதரர் பசுபதி குமார் பராஸ் ஓர் அணியாகவும், ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் லோக் ஜனசக்தி கட்சி ஓர் பிரிவாகவும் செயல்பட்டுவந்தனர்.

இதில் பசுபதிகுமார் பராஸ், மத்திய பாஜக அரசில் அமைச்சராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 17 தொகுதிகளிலும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 தொகுதிகளிலும், 2 தொகுதிகள் இதர கட்சிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிராக் பாஸ்வான், பசுபதிகுமார் பராஸ்
சிராக் பாஸ்வான், பசுபதிகுமார் பராஸ்

இந்நிலையில் பசுபதிகுமார் பராஸ், தனக்கு பாஜக துரோகம் செய்துவிட்டதாக கூறி, அதிருப்தியில் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சிராக் பாஸ்வானுக்கு வைஷாலி, ஹாஜிபூர், சமஸ்திபூர், ககாரியா மற்றும் ஜமுய் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அவரது கட்சியிலும் கலகம் வெடித்துள்ளது.

லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளையும் சிராக் பாஸ்வான் விற்றுவிட்டதாக 22 முன்னணி தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளதால் சிராக் பாஸ்வான் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ராஜினாமா செய்த 22 பேரில் முன்னாள் அமைச்சர் ரேணு குஷ்வாஹா, முன்னாள் எம்எல்ஏ-வும், எல்ஜேபி தேசிய பொதுச் செயலாளருமான சதீஷ் குமார், மாநில அமைப்பு செயலாளர் ரவீந்திர சிங், மாநில பொதுச் செயலாளர் ராஜேஷ் டாங்கி, அஜய் குஷ்வாஹா, சஞ்சய் சிங் ஆகியோர் முக்கிய தலைவர்கள் ஆவர்.

சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியிலிருந்து விலகிய தலைவர்கள்
சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியிலிருந்து விலகிய தலைவர்கள்

கட்சியிலிருந்து விலகியவர்கள் கூறுகையில், “திறமையான மற்றும் கட்சி வளர்ச்சிக்கு கடினமாக உழைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு, வெளியில் இருந்து வந்தவர்களுக்கு தேர்தல் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. புதிய பீகார் உருவாக சிராக் பாஸ்வானை ஆதரித்து உழைத்தவர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. எங்களின் கனவுகள் நொருங்கிவிட்டது. எனவே, நாட்டைக் காப்பாற்ற, நாங்கள் இனி இந்தியா கூட்டணியை ஆதரிப்போம்.” எனத் தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் சீட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்து ஒரே நேரத்தில் 22 தலைவர்கள் விலகியுள்ளதால் சிராக் பாஸ்வான் மட்டுமின்றி, பாஜக கூட்டணியினரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பீகாரில் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in