
ஆன்லைன் வர்த்தகம் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள 21 கோடி வணிகர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் 1 கோடி வணிகர்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நம்மிடம் கூறுகையில், “ஆன்லைன் வார்த்தகம் மூலம் மளிகைப் பொருட்கள் விற்பதினால் சிறு,குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி கடைகள் காலிசெய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் வியாபாரிகள் மட்டும் அல்ல கடையின் உரிமையாளரும் பாதிக்கப்படுவார்கள். கடைகளினால் வாடகை வருமானம் வந்து கொண்டிருந்த நிலையில் கடைகளைக் காலிசெய்யும் போது அந்த வருமானம் பாதிக்கும்.
இந்தியா முழுவதும் 21 கோடி வணிகர்கள் உள்ளனர். அவர்களை நம்பி அவர்களது குடும்பங்கள் மற்றும் வாடகை வண்டி, தொழிலாளர்கள் என பலரும் உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1 கோடி வணிகர்கள் உள்ளனர்.
இந்தியாவில் உலக நாடுகளின் பொருட்கள் ஆன்லைன் டிரேடிங் மூலம் விற்பனை செய்யப்படும் போது பொருட்களின் விலைகள் மாறுப்படுகிறது. ஆன்லைன் வார்த்தகமும் வளர வேண்டும் அதே சமயம் உள்ளூர் வியாபாரிகளும் வாழவேண்டும். இதற்கு ஒரே தீர்வு உற்பத்தி பொருள்களுக்கு ஒரே விலை தான் இருக்க வேண்டும். உற்பத்தியாளர்கள் வியாபாரிகளிடம் பொருட்கள் வழங்கும் போது அது வியாபாரிகளானாலும் சரி, ஆன்லைன் நிறுவனங்களானாலும் சரி அல்லது பெரிய நிறுவனங்களானாலும் சரி இந்தியா முழுவதும் உற்பத்தி பொருட்களுக்கு ஒரே சீரான விலை இருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் சீரான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வணிகர்கள் பாதித்து அவர்களை நம்பி உள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். மத்திய அரசு இதற்கு உடனடியாக சட்டம் இயற்றி வணிகர்களைப் பாதுகாக்க வேண்டும். போட்டிகள் அதிகரிப்பு காரணமாக விலைகளை குறைத்து வழங்கி வியாபாரத்தைத் தக்க வைக்க நினைத்தால் அது எல்லாத்தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்றார்.