குறைந்தபட்ச அபராதமே ரூ.20 ஆயிரம்: கடைக்காரர்களை எச்சரிக்கும் வணிகர் சங்கம்

குறைந்தபட்ச அபராதமே ரூ.20 ஆயிரம்: கடைக்காரர்களை எச்சரிக்கும்  வணிகர் சங்கம்

வணிகவரித்துறை அதிகாரிகள் மளிகைக் கடைகளுக்கு வந்து 'மாதிரி கொள்முதல்'  என்ற பெயரில்  ஆய்வு செய்து பில் இல்லாமல் விற்பனை செய்யும்  கடைகளுக்கு அபராதம் விதிப்பதால், பில் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று  கடைக்காரர்களை  வணிகர் சங்கம் எச்சரித்துள்ளது. 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட அமைப்பினர்  அந்த மாவட்டத்தில் உள்ள வணிகர்களுக்கு இது குறித்து நேற்று இரவு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர்.  அந்த சுற்றறிக்கையில், 'நாமக்கல் நகரில் உள்ள பிரபல மளிகை கடையில் வணிக வரித்துறை அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் போல வந்து சுமார் 600 ரூபாய்க்கு (தேங்காய் எண்ணெய், ஹார்லிக்ஸ் & ஹார்பிக்) பொருட்கள் வாங்கினர். கடைக்காரர் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் முறையான வரி பில் தராமல் பொருட்களை விற்பனை செய்துள்ளார்.

​மாதிரி கொள்முதல் (Test Purchase)​ அனுமதிபெற்று வந்த வணிகவரி அதிகாரிகள் இந்த தவறுக்கு ரூ.20 ஆயிரம் (CGST ₹10,000 & SGST ₹10,000) அபராதம் விதித்தனர்.  இதுகுறித்து சோதனைக்கு வந்த வணிகவரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது 'இது அரசு உத்தரவு, பில் இல்லாமல் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தோம், எங்களால் எதுவும் செய்ய இயலாது' என தெரிவித்தனர். முதல் முறை தவறு என்பதால் அபராதத் தொகையை குறைத்து போடுங்கள் என கேட்டுக் கொண்டபோது  'குறைந்தபட்ச அபராதமே ரூ.20 ஆயிரம் தான் '  என தெரிவித்தனர்.

இந்த ‘மாதிரி கொள்முதல்’  பற்றியும், அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்வார்கள் என்பது பற்றியும் நமது பேரமைப்பு சார்பில் பலமுறை வணிகர்களுக்கு எச்சரிக்கை செய்திருந்தோம். எனினும் இன்னும் பலர் கவனக்குறைவுடன் செயல்படுகின்றனர். இதுபோல அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக மளிகை, ஹார்டுவேர், சிமெண்ட், ஆட்டோமொபைல் ஸ்பேர்ஸ், எலெக்ட்ரிக்கல்ஸ் போன்ற கடைகளில் இந்த ‘மாதிரி கொள்முதல்’ சோதனை செய்வார்கள்.

எனவே, வணிகர்கள் எக்காரணம் கொண்டும் ரூ.200-க்கும் அதிகமான தொகைக்கு எந்த பொருட்களையும் பில் இல்லாமல் வழங்க வேண்டாம் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் எச்சரித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in