
கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட பச்சைக்கிளிகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், கிளிகள் வளர்த்தவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.
நாகர்கோவிலை அடுத்த மேலப்புத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் மெய்யல்(58). இவர் தன் வீட்டில் சட்ட விரோதமாக பச்சைக் கிளிகளை வளர்த்து வருவதாக மாவட்ட வன அலுவலர் இளையராஜாவுக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பூதப்பாண்டி வனச்சரகர் தலைமையிலான குழுவினர் மெய்யல் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது. இரு பச்சைக்கிளிகள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர், மெய்யலுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் இரு பச்சைக் கிளிகளையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறுகையில், “வீட்டில் காட்டு விலங்குகள், பறவைகளை வளர்ப்பது குற்றம். அப்படி யாரும் வளர்த்தால் மாவட்ட வன அலுவலகத்தில் வந்து ஒப்படைக்க வேண்டும். வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-ன் படி, தடைசெய்யப்பட்ட பட்டியல் நான்கில் பச்சைக்கிளி வருகிறது. அதனால் அதை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றம்” என்றார்.
முன்னதாக சில தினங்களுக்கு முன்பு வீட்டில் பச்சைக்கிளி வளர்த்த நடிகர் ரோபோ சங்கருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் வீட்டில் பச்சைக்கிளி வளர்ப்போருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.