மின் வாகன ஓட்டிகளுக்கோர் நற்செய்தி: நாடு முழுதும் 20,000 மின்னேற்ற நிலையங்கள்!

எண்ணெய் நிறுவனங்கள் அமைக்கின்றன!
மின் வாகன ஓட்டிகளுக்கோர் நற்செய்தி: நாடு முழுதும் 20,000 மின்னேற்ற நிலையங்கள்!

புவி வெப்பமடைவதைத் தடுக்க பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்தியாவிலும் மின்சார பேட்டரிகளில் இயங்கும் கார், ஸ்கூட்டர் விற்பனையை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு உதவியாக நாடு முழுவதும் 20,000 மின்னேற்ற நிலையங்களை அமைக்க பெட்ரோல், டீசல் விற்பனையில் ஈடுபடும் அரசுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்), பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்) இந்துஸ்தான் பெட்ரோலியம் லிமிடெட் (எச்பிசிஎல்) ஆகியவை முடிவு செய்துள்ளன.

ஐஎசிஎல் நிறுவனம் 10,000 மின்னேற்ற நிலையங்களை நிறுவுகிறது. பாரத் பெட்ரோலியம் 7,000, இந்துஸ்தான் பெட்ரோலியம் 5,000 மின்னேற்ற நிலையங்களை நிறுவுகின்றன. இவை போக தனியார் பெட்ரோல் – டீசல் நிலையங்களும் தங்களுடைய வளாகங்களில் மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்யும் ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளன.

மின் வாகன உற்பத்தியாளர்களும் தங்களுடைய விற்பனை நிலையங்கள் மூலம் மின்னேற்ற வசதிகளைச் செய்யப் போகின்றன. இதனால் நெடிய தொலைவுக்குக் கூட தயக்கமோ, வழியில் மின்சாரம் தீர்ந்து வாகனத்தைத் தள்ளிச்செல்ல நேரிடுமோ என்ற அச்சமோ இல்லாமல் வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியும். இது வாகன விற்பனையையும் பயன்பாட்டையும் ஊக்குவிக்கும்.

அனைத்துப் பெருநகரங்களிலும் நகரங்களிலும் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் ஒரு மின்னேற்ற நிலையத்தை ஏற்படுத்திவிடுவது என்ற இலக்கோடு அரசு செயல்படுகிறது. மின்னேற்ற நிலையங்களை அமைப்பதற்கான வழிகாட்டு நெறிகளையும், தர நிர்ணய அளவையும் மின்னேற்ற நிலையங்களை அமைப்பதற்கு அனைவரும் முன்வரும் நிலையில் அரசு திருத்தியமைத்து கடந்த ஜனவரி 14-ல் அறிவித்தது. மின் வாகனத் தயாரிப்புக்கு அளிப்பதைப் போன்ற சலுகைகள் மின்னேற்ற நிலையங்களை அமைப்பதற்கும் அளிக்கப்படுகிறது. மாநில அரசுகளும் இதில் ஒத்துழைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

ஹீரோ ஹோண்டா, டிவிஎஸ், பஜாஜ் போன்ற பெரிய மோட்டார் வாகன நிறுவனங்களும் மின்சார ஸ்கூட்டர்களைத் தயாரித்து வந்தாலும் அவற்றுக்கும் முன்னதாகவே பெங்களூரு, சென்னை, புணே ஆகிய நகரங்களில் பல புதிய நிறுவனங்கள் மின்சார வாகனத் தயாரிப்பைத் தொடங்கிவிட்டன. மின் வாகன விற்பனையும் நகரங்களில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு மட்டும் செல்லப் பயன்படுத்துவோருக்கு மின்சார வாகனங்கள் பெரிதும் கை கொடுக்கும். இதை வாங்க தொடக்கத்தில் சற்று அதிகம் செலவு செய்ய வேண்டும் என்றாலும் எரிபொருள் செலவைக் கணிசமாக மிச்சப்படுத்த முடியும்.

பெட்ரோல் - டீசல் தயாரிக்க, கச்சா பெட்ரோலிய எண்ணெயை உலக அளவில் அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதல் வரிசையில் இருக்கிறது. அரிய அந்நியச் செலாவணியை இதற்கே அதிகம் செலவழிக்க நேர்கிறது. மின்சார பாட்டரிகளை இந்தியாவில் தயாரித்துக் கொள்ள முடியும். இதனால் இந்தியாவுக்குள் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். பாட்டரிகளைத் தரமாக தயாரிக்க உலக அளவில் புகழ்பெற்ற இந்திய நிறுவனங்கள் பல இருப்பதால், நாளடைவில் மின்சார பாட்டரி ஏற்றுமதி மூலமும் நமக்கு கோடிக்கணக்கில் வருவாய் பெருகும்.

மின்சாரத்தை அனல் - புனல் மின் நிலையங்கள் மூலம் தயாரிக்கிறோம். இப்போது காற்றாலை மின்சாரத்துக்கும் சூரிய ஒளி மின்சாரத்துக்கும் முக்கியத்துவம் தந்து தயாரிக்கிறோம். வீட்டு மேல் கூரைகளில் மின்சாரம் தயாரிப்பது வேகமாகப் பரவினால் வீடுகளிலேயே பாட்டரிகளை சார்ஜ் செய்தும் பயன்படுத்தி, மின்சாரக் கட்டணச் செலவுகளை நடுத்தர வகுப்பால் கணிசமாகக் குறைத்துக்கொள்ள முடியும். புவி வெப்பமடைவதைத் தடுக்க காற்றில் கார்பன் உள்ளிட்ட மாசுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளையும் எளிதில் நிறைவேற்ற முடியும்.

மின்சார பாட்டரிகளைப் பொறுத்தவரை, சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் போல ஒன்றை வாகனத்தில் பொருத்தினால், இன்னொன்றைத் தயார் நிலையில் வீட்டிலேயே வைத்திருந்து மாற்றிப் பொருத்திக் கொள்ள முடியும். இதற்கான திட்டத்தை ஊக்குவிக்கவும் அரசு தீவிரமாக நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது. இதனால் பாட்டரி சார்ஜ் ஆகும்வரை காத்திருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இருக்காது.

மின்சார பாட்டரி தயாரிப்பிலும் இந்தியாவில் பல புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சோடியம் என்று அழைக்கப்படும் ரசாயன உப்பைப் பயன்படுத்தும் ஆராய்ச்சிகள் வளர்ந்து வருகின்றன. லித்தியத்துக்குப் பதிலாக சோடியம் பாட்டரிகள் பயன்பாடு பெருமளவுக்கு வந்துவிட்டால், பாட்டரி தயாரிப்புச் செலவும் குறையும். சூரிய ஒளி மின்தகடுகள் ஆராய்ச்சியும் இப்படி நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வருகிறது. சூரிய ஒளியை அதிகம் ஈர்க்கவும் அதன் வெப்பத்தை அதிக நேரம் வைத்திருக்கவும், அதிலிருந்து அதிக மின்னாற்றலைப் பெறவும்கூட ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்புச் சாதனங்களைக் குறைந்த செலவில் தயாரிக்கும் ஆய்வுகளும் போட்டி போட்டு வளர்கின்றன.

எனவே, இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் எரிபொருள் தேவைகளுக்கு வெளிநாடுகளை நம்பியிருக்கும் நிலைமை மாறும். பெட்ரோல் – டீசல் தயாரிக்கும் நிறுவனங்கள் விற்பனை விலையைக் குறைப்பதுடன், இந்தியா போன்ற பெரிய வாடிக்கையாளர்களுக்குச் சலுகை விலையிலும் விற்க முன்வர வாய்ப்புகள் அதிகம்.

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், சூரத், புணே, மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட ஒன்பது நகரங்களில் மட்டும் இப்போது 940 மின்னேற்ற நிலையங்கள் வந்துவிட்டன. நாற்பது லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகையுள்ள மெகா சிட்டிகளில் கூடுதலாக 678 மின்னேற்ற நிலையங்கள் அக்டோபர் 2021 முதல் ஜனவரி 2020-க்குள் நிறுவப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.