
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல், போன் பேசியபடியே டூவீலர் ஓட்டிய பெண் தலைமைக் காவலருக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தலைமைக் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பெண் தலைமைக் காவலர் ஒருவர் தன் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் போடாமல், அதேநேரம் செல்போன் பேசியபடியே வந்தார். இதை அப்பகுதிவாசிகள் சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இது கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் கவனத்திற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தலைமைக் காவலருக்கு தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல் ஆகிய விதிமீறல்களுக்காக குளச்சல் போக்குவரத்து போலீஸார் 2000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதேபோல் குமரியில் தலைக்கவசம் அணியாமல் யார் வந்தாலும், பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதேபோல் எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் இன்று களியக்காவிளை காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸாருக்கு துப்பாக்கியைக் கையாளத் தெரியவில்லை. அவர்கள் எஸ்.பியின் முன்னிலையில் தடுமாறினர். இதனைத் தொடர்ந்து எஸ்.பி அவர்களுக்கு உரிய பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி எடுத்துக்கொள்ள பரிந்துரைத்தார்.