
ஆபரேஷன் கஞ்சா வேட்டை மூலம் 2000 வங்கிக் கணக்குகள் மற்றும் 50 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. கஞ்சா போதைக்கு இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் அடிமையாகியுள்ளனர். பள்ளி மாணவர்கள் கஞ்சா பயன்படுத்தும் வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. பள்ளி, கல்லூரி வளாகங்களில் வாட்ஸ்அப், கூகுள் பே போன்ற செயலிகளைப் பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்யப்பட்டுவருகிறது. கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டி தமிழக அரசிற்கு எதிராக அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்துவருகிறார்கள். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நுகர்வை கட்டுப்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை’ என்ற பெயரில் கஞ்சா கடத்தல் மற்றும் பயன்பாட்டுக்கு எதிராகச் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் தமிழகத்தில் கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதன் மூலம் 50 கோடி மதிப்பிலான சொத்துகள் மற்றும் பணம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தென் மண்டலத்தில் மட்டும் 160 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.