200 ரூபாய்க்குப் பதில் ஏடிஎம்மில் வந்த 20 ரூபாய்: வாலிபர் அதிர்ச்சி

ஐயப்பன்
ஐயப்பன் 200 ரூபாய்க்குப் பதில் ஏடிஎம்மில் வந்த 20 ரூபாய்: வாலிபர் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தனியார் ஏடிஎம் ஒன்றில் 200 ரூபாய் பணத்தாளுக்குப் பதில் 20 ரூபாய் பணத்தாள் வந்ததால், பணம் எடுக்க வந்தவர் அதிர்ச்சி அடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் சாலைபுதூர்-தோணுகால் சாலையில் இந்தியா ஒன் என்னும் பெயரில் தனியார் ஏடிஎம் ஒன்று உள்ளது. இங்கு படர்ந்தபுளி என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் பணம் எடுக்க வந்தார். இவர் தனியார் உணவு நிறுவனம் ஒன்றில் டெலிவரிமேனாக உள்ளார், இவர் அந்த ஏடிஎம்மில் 3500 ரூபாய் பணம் எடுத்தார்.

அப்போது அதில் 6 ஐநூறு ரூபாய் தாள்களும், ஒரு நூறு ரூபாய் தாளும், இரண்டு இருபது ரூபாய் தாளுமாக மொத்தம் 3140 ரூபாய் மட்டுமே வந்தது. அதாவது இருநூறு ரூபாய் தாளுக்குப் பதில், அதில் இருபது ரூபாய் தாள் வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஐயப்பன், தனது வங்கிக் கணக்கு இருக்கும் வங்கியை போனில் அழைத்து விஷயத்தைச் சொன்னார். அவர்கள் மூலம் தனியார் ஏடிஎம்மிற்குத் தகவல் சென்றது.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஏடிஎம்மில் பணத்தை நிரப்பும் தனியார் வங்கி ஊழியர்கள் நேரில் வந்துப் பார்த்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து அவர்கள் ஐயப்பனிடம், “ஏடிஎம்மில் இருபதுரூபாய் தாள் வராது. அப்படி தவறு நடந்து இருந்தால் மூன்றுநாள்களில் உங்கள் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.”எனத் தெரிவித்தனர். அவர் இதுதொடர்பாக வங்கித்தரப்பிற்கு புகார் கடிதமும் ஐயப்பன் கொடுத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in