செல்போன் கடை உரிமையாளர் வீடு, கடையில் 20 லட்சம் கொள்ளை: என்ஐஏ பெயரில் கைவரிசை காட்டிய கும்பல்

செல்போன் கடை உரிமையாளர் வீடு, கடையில் 20 லட்சம் கொள்ளை: என்ஐஏ பெயரில் கைவரிசை காட்டிய கும்பல்

சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் போல் நடித்து செல்போன் கடை உரிமையாளரின் வீடு மற்றும் கடையில் 20 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கும்பலை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சென்னை முத்தியால்பேட்டை மலையப்பன் தெருவில் ஜமால்(40) என்பவர் தனது சகோதரர்களுடன் வசித்து வருகிறார். இவர் பர்மா பஜார் பகுதியில் தனது சகோதரர்களுடன் சேர்ந்து செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று இவரது வீட்டிற்கு வந்த 4 மர்மநபர்கள் ஜமாலிடம் தங்களை என்ஐஏ அதிகாரிகள் என்றும், உங்கள் வீட்டை சோதனையிட வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.பின்னர் அந்த கும்பல் ஜமால் உள்ளிட்டோரின் செல்போன்களை வாங்கி வைத்து கொண்டு அவரது வீட்டில் சோதனை நடத்தி 10 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டனர்.

அத்துடன் பர்மா பஜாரில் உள்ள ஜமாலின் செல்போன் கடைக்குச் சென்ற அதே கும்பல் கடையில் சோதனை நடத்தி கடையில் இருந்து 10 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு மொத்தம் 20 லட்சம் ரூபாய் பணத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதற்கிடையே முத்தியால்பேட்டை மற்றும் பர்மா பஜார் பகுதிகளில் என்ஐஏ சோதனை நடைபெற்றதாக தகவல் அறிந்து முத்தியால்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஜமால் வீடு மற்றும் செல்போன் கடையில் என்ஐஏ அதிகாரிகள் எனக்கூறி ஒரு கும்பல் போலியாக சோதனை நடத்தி 20 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. பின்னர் ஜமாலிடம் இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சோதனை நடத்திச் சென்றது உண்மையான என்ஐஏ அதிகாரிகள் இல்லை என்பது ஜாமலுக்குத் தெரியவந்தது.

பின்னர் இச்சம்பவம் குறித்து ஜமாலிடம் புகாரைபெற்று முத்தியால்பேட்டை போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் ஜமால் மற்றும் சகோதரர்கள் ஹவாலா தொழிலில் ஈடுபட்டு வருவதும், அவர்களிடம் பணப் புழக்கம் இருப்பதை அறிந்து மர்ம கும்பல் என்ஐஏ அதிகாரிகள் என்ற போர்வையில் வீடு மற்றும் கடையில் சோதனை நடத்தி 20 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. மேலும் கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் அடிக்கடி மண்ணடி, பூக்கடை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வரும் சூழலில், இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட இந்த மோசடி கும்பல் என்ஐஏ அதிகாரிகள் போல நடித்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனரா அல்லது ஜமால் மற்றும் சகோதர்கள் யாரேனும் ஆள் வைத்து சோதனை நாடகத்தை அரங்கேற்றியுள்ளனரா என கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலி என்ஐஏ கும்பலை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

சென்னையில் பரபரப்பாக காணப்படும் பகுதியில் என்ஐஏ அதிகாரி போல் நடித்து ஒரு கும்பல் 20 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in