வடக்கு சிரியாவில் நிலநடுக்க பாதிப்பு
வடக்கு சிரியாவில் நிலநடுக்க பாதிப்புThe Hindu

நிலநடுக்கத்தால் குலைந்த சிரியா சிறை: 20 ஐஎஸ் பயங்கரவாதிகள் தப்பியோட்டம்

துருக்கி - சிரியா எல்லையில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் இரு நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை தொலைந்திருக்கிறது. இதன் மத்தியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் சிறையிலிருந்து தப்பியோடிய சம்பவம் ஒன்றும் நிகழ்ந்திருக்கிறது.

7.8 ரிக்டர் ஸ்கேல் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் 5 ஆயிரம் வரையிலான உயிர்ப் பலிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் பல்லாயிரக்கணக்கிலான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். துருக்கியோடு ஒப்பிடுகையில் சிரியாவின் பாதிப்பு குறைவு என்ற போதும், நேற்றைய நிலவரப்படியே நூற்றுக்கணக்கானோர் அங்கு உயிரிழந்து இருக்கின்றனர். பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் சரிந்துள்ளன. உள்நாட்டுப் போரில் சீரழிந்துள்ள சிரியாவில், நிலநடுக்கம் மேலும் பாதிப்பை விளைவித்துள்ளது.

துருக்கி எல்லையோரம் அமைந்துள்ள ரஜோன் நகரின் சிறைச்சாலை ஒன்றும் இந்த நிலநடுக்கத்தால் குலைந்தது. நிலநடுக்கம் தாக்கியதன் அமளிதுமளியில், சிறை நிர்வாகத்தினர் மற்றும் காவலர்கள் சுதாரிப்பதற்குள், சிறைவாசிகள் பலரும் சிறை வளாகத்திலிருந்து வெளியேற முயன்றனர். அவர்களை சிறைபாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்தப் பின்னரே, 20 முக்கிய கைதிகள் தப்பியோடிய விவகாரம் உறுதியானது.

தப்பியவர்கள் அனைவரும் சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அங்கத்தினர்கள் என்பதும் உறுதியாகி இருக்கிறது. சுமார் 2,000 சிறைவாசிகளை உள்ளடக்கிய ரஜோன் சிறைச்சாலை முழுக்க ஐஎஸ் பயங்கரவாதிகள் மற்றும் குர்திஷ் போராளிகளை உள்ளடக்கியது. ஐஎஸ் தரப்பிலானோர் மட்டும் சுமார் 1300க்கும் மேலானோர் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மத்தியில், சிறையிலிருந்து தப்ப முயற்சிப்பது, அதே நோக்கத்தில் வெளியிலிருந்து அவர்களின் ஆதரவாளர்கள் சிறைச்சாலை மீது தாக்குதல் தொடுப்பது என அபாயங்களுக்கு உட்பட்டே ரஜோன் சிறைச்சாலை இயங்கி வந்திருக்கிறது.

நிலநடுக்கத்தால் சிறை வளாகத்தின் பல்வேறு சுவர்களும் சிதிலமானதில், ஐஎஸ் பயங்கரவாதிகள் தப்புவதற்கு அவை ஏதுவாகி இருக்கின்றன. நிலநடுக்க பாதிப்புகளின் மத்தியில் தப்பிப்போன பயங்கரவாதிகளை தேடும் பணியிலும் சிரியா காவல்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in