30 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து; அலறிய சுற்றுலாப் பயணிகள்: கண்ணாடியை உடைத்து மீட்கப்பட்ட 40 பேர்

கவிழ்ந்த பேருந்து
கவிழ்ந்த பேருந்து

கர்நாடகாவிலிருந்து கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிய போது பேருந்து 30 அடி ஆழ பள்ளத்தில் விழுந்ததில் 20 பேர் படுகாயம் அடைந்ததோடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல். நாள்தோறும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இச்சூழலில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 40 பேர் தனியார் பேருந்தில் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுவிட்டு இன்று காலை கொடைக்கானலிலிருந்து கீழே இறங்கி உள்ளனர். அப்போது, டம்டம்பாறை அருகே வந்த போது பேருந்து ஓட்டுநர் சிறுநீர் கழிப்பதற்காக வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி உள்ளார்.

பின்பக்க கண்ணாடியை உடைத்து வெளியேறும் பயணி
பின்பக்க கண்ணாடியை உடைத்து வெளியேறும் பயணி

ஹேன்ட் பிரேக் போட்டிருந்தும் கூட வண்டி எதிர்பாராத விதமாக அருகில் இருந்த 30 அடி ஆள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதனால் பேருந்தில் இருந்தவர்கள் அலறினர். இதனைக் கண்ட அப்பகுதியில் வந்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பேருந்தில் பின்பக்க கண்ணாடியை உடைத்து சேலையைக் கட்டி உள்ளே இருந்த 40 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில், லேசான காயமடைந்த 20 பேரை வத்தலகுண்டு மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in