தைலமரக்காட்டில் 2 பெண்கள் வெட்டிக்கொலை: காளான் பறிக்கச் சென்ற இடத்தில் பயங்கரம்

தைலமரக்காட்டில் 2 பெண்கள் வெட்டிக்கொலை: காளான் பறிக்கச் சென்ற இடத்தில் பயங்கரம்

ஜெயங்கொண்டம் அருகே காளான் பறிக்கச் சென்ற 2 பெண்களை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த பெரியபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தண்டபாணி மனைவி கண்ணகி (50). கலைமணி மனைவி மலர்விழி (29). இவர்கள் இருவரும் இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள தைலமரக்காட்டில் உணவுக்காக காளான் பறிக்க சைக்கிளில் இன்று சென்றனர்.

ஆனால், நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் மலர்விழிக்கு போன் செய்து பார்த்த போது, அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால், தைலமரக்காட்டுப் பகுதிக்கு அவர்களது குடும்பத்தினர் சென்று பார்த்தனர்.

அப்போது தைலமரக்காட்டின் சாலையோரத்தில் அவர்கள் சென்ற சைக்கிள் நின்றுள்ளது. இதையடுத்து, காட்டினுள் சென்று பார்த்தபோது, கண்ணகி, மலர்விழி இருவரும் அரிவாளால் வெட்டி முகம் சிதைத்து கொடூரமாக கொலைசெய்யப்பட்டுக் கிடந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த ஜெயம்கொண்டம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களையும் மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் கண்ணகி, மலர்விழி அணிந்திருந்த தாலி சங்கிலி திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே, நகைக்காக இந்த இரட்டைக்கொலை நடந்ததா அல்லது வேறு காரணத்திற்காக நடந்ததா என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இரண்டு பெண்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in