பூட்டப்பட்ட வீட்டுக்குள் சூழ்ந்த கரும்புகை; மூச்சுத்திணறி 2 பெண்கள் பலி: தீயணைப்புத் துறையினரின் அதிர்ச்சி தகவல்

பூட்டப்பட்ட வீட்டுக்குள் சூழ்ந்த கரும்புகை; மூச்சுத்திணறி 2 பெண்கள் பலி: தீயணைப்புத் துறையினரின் அதிர்ச்சி தகவல்

பிரிட்ஜ்ஜில் தீப்பிடித்து ஏற்பட்ட புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூதாட்டி, செவிலியர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அசோக்நகர் 12-வது அவென்யூவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் தரைத்தளத்தில் பழக்கடையும், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் குடியிருப்புகளும் உள்ளன. முதல் தளத்தில் ஜானகி(92) என்பவர் தனது மகள் ஜெயா(59) உடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக ஜானகி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை கவனித்து கொள்வதற்காக மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரியா(27) என்ற செவிலியரை பணிக்காக நியமித்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் செவிலியர் ஜெயப்பிரியா இங்கு பணிக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஜானகியும், செவிலியர் ஜெயப்பிரியாவும் படுக்கையறையிலும், ஜெயா ஹாலிலும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டு சமையலறையில் இருந்த பிரிட்ஜ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் வீடு முழுதும் கரும்புகை சூழ்ந்தது. ஜெயா கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது கதவு உள்பக்கம் தாழ்பாள் போட்டிருந்ததால் தீயணைப்பு துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதன் பேரில் அசோக்நகரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஜன்னலை உடைத்து தீயை அணைத்தனர். வீட்டிற்குள் 3 பெண்கள் சிக்கி உள்ளதை அறிந்த வீரர்கள் முன்பக்க தகவை உடைத்து உள்ளே சென்று ஹாலில் மயங்கிய நிலையில் இருந்த ஜெயாவை மீட்டு சிகிச்சைக்காக கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுக்கையில் மயங்கிய நிலையில் கிடந்த செவிலியர் ஜெயப்பிரியா, மூதாட்டி ஜானகியை மீட்டு முதலுதவி அளித்தனர். ஆனால், செவிலியர் ஜெயப்பிரியா முச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜானகி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த செவிலியர் ஜெயப்பிரியா.
உயிரிழந்த செவிலியர் ஜெயப்பிரியா.

பின்னர் அங்கு வந்த போலீஸார், ஜெயப்பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குமரன் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து வீடு முழுவதும் புகை சூழ்ந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு செவிலியர் ஜெயப்பிரியா, ஜானகி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து ஜெயாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in