தவறுதலாக ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூடு: இருவர் காயம்!

நாகாலாந்து சம்பவத்துக்குப் பின்னர் அருணாசல பிரதேசத்தில் மற்றொரு சம்பவம்
தவறுதலாக ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூடு: இருவர் காயம்!

அருணாசல பிரதேசத்தில் ராணுவத்தினர் தவறுதலாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு அப்பாவி இளைஞர்கள் காயமடைந்தனர்.

அம்மாநிலத்தின் திராப் மாவட்டத்தில் உள்ள சாஸா கிராமத்தில் நேற்று மாலை நடந்த இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நோக்பியா வாங்டான் (28), ராம்வாங் வாங்சு (23) இருவரும் ஆதரவற்றவர்கள். அருகில் உள்ள குளத்தில் மீன் பிடித்துவிட்டு திரும்பியபோது அவர்கள் மீது ராணுவத்தினர் தவறுதலாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அடையாளக் குழப்பத்தில் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினர் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

ஒருவருக்குக் கையிலும் இன்னொருவருக்குக் காலிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திப்ரூகரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (ஏஎம்சிஎச்) ராணுவத்தினரால் கொண்டுசெல்லப்பட்டனர். இருவரும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ராணுவத்தினருக்கு உதவிய கிராமவாசி ஒருவர், “ஆதரவற்ற இருவருக்கும் அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

திராப் மாவட்ட பாஜக தலைவர் கம்ராங் தேசியா இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பொதுமக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, தவறான உளவுத் தகவல்களின் அடிப்படையில் கண்மூடித்தனமாக ராணுவத்தினர் செயல்படுவதாக அவர் கூறியிருக்கிறார்.

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில், கடந்த டிசம்பரில் தவறான உளவுத் தகவலின் அடிப்படையில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (ஆஃப்ஸ்பா) ரத்துசெய்ய வேண்டும் என்று பெரும்பாலான வட கிழக்கு மாநிலங்கள் வலியுறுத்திவருகின்றன. சமீபத்தில் அருணாசல பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களுக்கு ஆஃப்ஸ்பா சட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்தியது. அவற்றில் திராப் மாவட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.