முஸ்லிம் இளைஞர்கள் 2 பேர் காருடன் எரித்துக்கொலை?: பஜ்ரங் தளம் அமைப்பு மீது குற்றச்சாட்டு

எரிந்து கிடக்கும் கார்
எரிந்து கிடக்கும் கார்முஸ்லிம் இளைஞர்கள் 2 பேர் காருடன் எரித்துக்கொலை?: பஜ்ரங் தளம் அமைப்பு மீது குற்றச்சாட்டு

ராஜஸ்தானில் கடத்தப்பட்ட இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் ஹரியாணாவில் காரில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள காட்மீகா கிராமத்தைச் சேர்ந்த நசீர்(25), ஜுனைத் என்ற ஜூனா (35) ஆகியோர் புதன்கிழமை காருடன் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது, இதுகுறித்து அவர்களது குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர். இந்த நிலையில், ஹரியாணா மாநிலம், பிவானியில் உள்ள லோஹாருவில் எரிந்த காருக்குள் நசீர், ஜுனைத் ஆகியோரின் உடல்கள் எலும்புக்கூடாக நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக நசீர் மற்றும் ஜுனைத்தின் உறவினர்கள் போலீஸில் புகார் தெரிவித்தனர். இந்த இரட்டைக்கொலைகளை பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் செய்ததாக அவர்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில், மோனு மானேசர், லோகேஷ் சிங்யா, ரிங்கு சைனி, அனில் மற்றும் ஸ்ரீகாந்த் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது என்று காவல் துறை தெரிவித்துள்ளது. அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காரில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட ஜுனைத் மீது பசு கடத்தல் வழக்குகள் உள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். இதன் காரணமாக அவருக்கும், பஜ்ரங்தளம் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, நசீர், ஜுனைத் கொலை செய்யப்பட்டார்களா என்று தெரிய வரும் என்று போலீஸார் கூறுகின்றனர். இந்நிலையில், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, இறந்த இருவரின் உடல்களும் காட்மீகா கிராமத்தில் உள்ள அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நசீர் மற்றும் ஜுனைத் ஆகியோரின் இறுதி சடங்குகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கிராம பஞ்சாயத்து தெரிவித்துள்ளது.

இந்த பஞ்சாயத்து கூட்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசாங்கத்தின் இணை அமைச்சர் ஜாஹிதா கான் கலந்து கொண்டார். இறந்தவரின் உறவினர்களுக்கு மாநில அரசின் இழப்பீடாக ரூ.15 லட்சமும், தன் சார்பாக தலா ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in