சென்னை, பிறநகரங்களுக்குச் செல்ல 2 லட்சம் பேர் முன்பதிவு: 3287 சிறப்பு பஸ்கள் ரெடி

சென்னை, பிறநகரங்களுக்குச் செல்ல 2 லட்சம் பேர் முன்பதிவு: 3287 சிறப்பு பஸ்கள் ரெடி

பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னைக்கும், பிற நகரங்களுக்கும் செல்ல 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதற்காக 3287 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த மூன்று நாட்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதுபோல சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பவும் இன்றுமுதல் மூன்று நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஜன.18-ம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருச்சி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதியில் இருந்து கூடுதலாக பஸ்கள் இன்று இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் நகரங்களில் இருந்து வெளியூர் சென்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் இன்றுமுதல் சென்னை உள்பட நகர்ப்புறங்களுக்கு திரும்புகிறார்கள். இதையொட்டி, போக்குவரத்து துறை கூடுதல் பேருந்துகளை இயக்குகிறது. அதன்படி இன்று முதல் ஜன.18-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் கூட்டத்தைத் தொடர்ந்து மேலும் சில பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருச்சி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதியில் இருந்து கூடுதலாக பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, கும்பகோணம், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், ஓசூர், தர்மபுரி, பெங்களூர் உள்பட பல நகரங்களில் இருந்தும் சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 1187 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3287 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோல சென்னையைத் தவிர்த்து பிற நகரங்களுக்கு 1525 சிறப்பு பஸ்கள் இன்று விடப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும், பிற நகரங்களுக்கும் செல்ல 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பஸ்கள் சென்னை திரும்புவதற்கு போலீஸாருடன் இணைந்து போக்குவரத்து அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். நாளை (ஜன.17) வெளியூர்களில் இருந்து சென்னைக்கு 1941 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in